இந்திய அணி வீரர்களின் திறமையை குறிப்பிட்டு பாராட்டிய ரோகித் சர்மா
எங்களுடைய விளையாட்டை பார்க்க திரண்டு வந்த மக்களுக்கு, இந்த வெற்றி திருப்தியளித்து இருக்கும் என ரோகித் சர்மா கூறினார்.;
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. இதனால், 252 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவினார்.
இதேபோன்று, கில், ஸ்ரேயாஸ், அக்சர் பட்டேல், கே.எல். ராகுல், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணி வெற்றி பெற உதவினர். இறுதியில், 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்த இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டி சென்றது.
போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் அறிவிக்கப்பட்டனர். இதன்பின்னர் இந்திய அணி வீரர்கள் வரிசையாக சென்று பதக்கங்களை பெற்றனர். கடைசியாக ரோகித் சர்மாவுக்கு பதக்கம் வழங்கப்பட்டதும், பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ரோகித், ரோகித் என கோஷம் எழுந்தது.
இதன்பின்பு அவர் பேசும்போது, எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இது எங்களுடைய சொந்த ஆடுகளம் இல்லை. ஆனால், கூடியிருக்கும் கூட்டம், இதனை எங்களுடைய சொந்த ஆடுகளம் போன்று மாற்றியிருக்கிறது. எங்களுடைய ஆட்டம் எப்படி இருக்க போகிறது என பார்க்க திரளாக கூடிய மக்களுக்கு, இந்த வெற்றி திருப்தியளித்து இருக்கும் என்றார்.
போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு அவர் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி அவர் பேசும்போது, சுழற்பந்து வீச்சாளர்கள், எதிரணியின் பலம் என்ன என அறிந்து செயல்பட்டனர். கே.எல். ராகுல் பந்துகளை சரியாக தேர்வு செய்து அடித்து, அமைதியான முறையில் விளையாடி, திறமையை வெளிப்படுத்தினார்.
அவரை சுற்றியிருந்த நெருக்கடியை பற்றி கவலை கொள்ளாமல் விளையாடினார் என ராகுலுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். வருண் சக்ரவர்த்தி சிறந்த தரத்திலான பந்து வீசும் திறனை கொண்டிருக்கிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள் என கூறினார்.