சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்.. தமிழக அணி ஆறுதல் வெற்றி

தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிரா உடன் விளையாடியது.;

Update:2025-12-09 15:57 IST

image courtesy: twitter/@BCCIdomestic

ஆமதாபாத்,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. இதன் 7-வது மற்றும் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன.

இதில் ஆமதாபாத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் (டி பிரிவு) தமிழக அணி, சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விஷ்வராஜ் ஜடேஜா 70 ரன்களும், சம்மர் கஜ்ஜார் 66 ரன்களும் அடித்தனர். தமிழக அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், இசக்கிமுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தமிழக அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் ஆன சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அணியை கரை சேர்த்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிதிக் ஈஸ்வரன் 29 ரன்களிலும், சன்னி சந்து 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

18.4 ஓவர்களில் தமிழக அணி 7 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி சதமடித்த சாய் சுதர்சன் 101 ரன்களுடன் (55 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட தமிழக அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. தமிழக அணி 3 வெற்றி, 4 தோல்வியுடன் தனது பிரிவில் 4-வது இடம் பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்