டி20 கிரிக்கெட்: இதுவரை எந்த வீரரும் படைத்திராத சாதனையை படைத்த ரசல்
இவர் சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.;
image courtesy:PTI
ஷார்ஜா,
6 அணிகள் இடையிலான சர்வதேச டி20 லீக் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெசர்ட் வைப்பர்ஸ் - அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அபுதாபி நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 53 ரன்களும், ரசல் 36 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய டெசர்ட் வைப்பர்ஸ் 19.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹெட்மயர் 48 ரன்கள் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் ரசல் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இது டி20 கிரிக்கெட்டில் அவரது 500-வது விக்கெட்டாக பதிவானது. இவர் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் 9,496 ரன்களும், 772 சிக்சர்களும் அடித்துள்ளார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5,000+ ரன்கள், 500 விக்கெட்டுகள் மற்றும் 500+ சிக்சர்கள் அடித்த உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனையை ரசல் படைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.