தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: சுப்மன் கில் விளையாடுவாரா..?

உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்தே சுப்மன் கில்லின் இடம் அணியில் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.;

Update:2025-12-07 15:56 IST

image courtesy:PTI

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இதனையடுத்து இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் வருகிற 9-ம் தேதி ஆரம்பமாகிறது. அதன்படி டி20 போட்டிகள் கட்டாக் (வருகிற 9-ந் தேதி), சண்டிகார் (11-ந் தேதி), தர்மசாலா (14-ந் தேதி), லக்னோ (17-ந் தேதி), ஆமதாபாத் (19-ந் தேதி) ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நீடிக்கிறார். அந்த அணியில் கொல்கத்தாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டின்போது கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய சுப்மன் கில் இடம்பெற்றிருந்தார். ஆனால் உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்தே அவரது இடம் அணியில் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுப்மன் கில் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தில் உடல் தகுதியை நிரூபிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் சுப்மன் கில் முழு உடல் தகுதியை எட்டியதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ கமிட்டி அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

இந்திய அணி வருமாறு:- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

Tags:    

மேலும் செய்திகள்