வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: அபிமன்யு ஈஸ்வரனுக்கு இடம் கிடைக்காததற்கு காரணம் அவரது தந்தைதான் - ஸ்ரீகாந்த்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பெறவில்லை.;

Update:2025-09-28 13:30 IST

image courtesy:PTI

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் 10-ந் தேதியும் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அணி பட்டியலை வெளியிட்டார்.

இங்கிலாந்து தொடரில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் கேப்டனாக நீடிக்கிறார். இந்த தொடருக்கான இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பெறாதது பலரது மத்தியிலும் விவாதங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியுடன் பயணித்த அவருக்கு இதுவரை ஒரு அறிமுக வாய்ப்பு கூட கொடுக்கப்படவில்லை. உள்நாட்டு போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கு நிச்சயம் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அண்மையில் முடிந்த இங்கிலாந்து தொடரில் இடம்பெற்றிருந்த அபிமன்யு ஈஸ்வரனுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அவரது தந்தை இந்திய நிர்வாகத்தை விமர்சித்து சில கருத்துகளை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் அபிமன்யு ஈஸ்வரன் வெஸ்ட் தொடரில் இடம்பெறாததற்கு அவரது தந்தை கூறிய கருத்துகளும் காரணமாக இருக்கலாம் என்று இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “அபிமன்யு ஈஸ்வரனை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இங்கிலாந்து தொடர் முடிவடைந்த கையோடு அவரது தந்தை சில காட்டமான கருத்துகளை சொன்னார் என்று நினைக்கிறேன். அதனால்தான் இப்போது அவரை நீக்கிவிட்டார்கள். ஆனால் உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கூடுதல் ஓப்பனர் தேவையில்லை என்ற அஜித் அகர்கரின் காரணமும் நியாயமானது” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்