ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: ஷத்மான் இஸ்லாம் சதம்... முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற வங்காளதேசம்
வங்காளதேசம் தரப்பில் ஷத்மான் இஸ்லாம் சதம் (120 ரன்) அடித்து அசத்தினார்.;
Image Courtesy: @ICC
சட்டோகிராம்,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 67 ரன் எடுத்தார்.
வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 87 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 291 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வங்காளதேசம் 64 ரன்கள் முன்னிலை பெற்றது.
வங்காளதேசம் தரப்பில் ஷத்மான் இஸ்லாம் சதம் (120 ரன்) அடித்து அசத்தினார். மெஹதி ஹசன் மிராஸ் 16 ரன்னுடனும், தைஜுல் இஸ்லாம் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே தரப்பில் வின்சென்ட் மசேகேசா 3 விக்கெட் வீழ்த்தி உள்ளார். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.