டெஸ்ட் கிரிக்கெட்: வெறும் 34 போட்டிகள்.. கபில்தேவின் மாபெரும் சாதனையை சமன் செய்த பும்ரா
கபில்தேவ் இந்த சாதனையை 66 போட்டிகளில் படைத்துள்ளார்.;
image courtesy:BCCI
லீட்ஸ்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (101 ரன்கள்), கில் (147 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ரன்கள்) சதம் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆலி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் (இந்தியாவுக்கு வெளியே) இந்த போட்டியையும் சேர்த்து இதுவரை 34 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 12 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற கபில்தேவின் வாழ்நாள் சாதனையை சமன் செய்துள்ளார்.
இதிலும் கபில்தேவ் இந்த சாதனையை 66 போட்டிகளில் படைத்துள்ளார். ஆனால் ஜஸ்பிரித் பும்ரா தனது 34-வது போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பட்டியல்:
1. பும்ரா (34 போட்டிகள்)/கபில்தேவ் (66 போட்டிகள்) - 12 முறை
2. இஷாந்த் சர்மா (63 போட்டிகள்) - 9 முறை
3. ஜாகீர் கான் (54 போட்டிகள்) - 8 முறை
4. இர்பான் பதான் (15 போட்டிகள்) - 7 முறை
6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை இழந்து 60 ரன்களுடன் விளையாடி வருகிறது.