டெஸ்ட் கிரிக்கெட்: ஒரு வருடத்தில் அதிக சிக்சர்.. உலக சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 2 சிக்சர்கள் அடித்துள்ளார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 49.4 ஓவர்களில் 150 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறியது.

அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும், ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டார்க் 26 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 218 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன ஜெய்ஸ்வால், 2-வது இன்னிங்சில் 2 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் உட்பட 90 ரன்களுடனுன் களத்தில் உள்ளனர்.

மேலும் தற்போது அடித்துள்ள இந்த 2 சிக்சர்களையும் சேர்த்து நடப்பாண்டில் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 34 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் நியூசிலாந்தை சேர்ந்த பிரண்டன் மெக்கல்லம் 33 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ஜெய்ஸ்வால் - 34 சிக்சர்கள்

2. பிரண்டன் மெக்கல்லம் - 33 சிக்சர்கள்

3. பென் ஸ்டோக்ஸ் - 26 சிக்சர்கள்

4. கில்கிறிஸ்ட்/சேவாக் - 22 சிக்சர்கள் 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com