இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 77-3

இங்கிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.;

Update:2025-07-03 23:32 IST

பர்மிங்காம்,

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த சுப்மன் கில் - ரவீந்திர ஜடேஜா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து பந்துவீச்சுக்கு தண்ணி காட்டிய இந்த ஜோடி 204 ரன்கள் பார்ட்னஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ஜடேஜா 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து சுப்மன் கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் கைகோர்த்தார். சுந்தரின் ஒத்துழைப்புடன் இரட்டை சதத்தை கடந்த சுப்மன் கில் தொடர்ந்து பேட்டிங் செய்தார். வாஷிங்டன் சுந்தர் பொறுமையாக விளையாடி,103 பந்துகளில் 42 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனிடையே சுப்மன் கில் 250 ரன்கள் அடித்தார். சுந்தர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே சுப்மன் கில்லும் 269 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கேப்டன் அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

பின்னர் களமிறங்கிய ஆகாஷ் தீப் 6 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குப்பிடித்த முகமது சிராஜ் 8 ரன்களிலும் (23 பந்துகள்) ஆட்டமிழந்தனர். முடிவில் 151 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷீர் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் மற்றும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பென் டக்கெட்(0), போப்(0), கிராலி(19) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 24 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. இதையடுத்து ரூட் - புரூக் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டது. 2-ம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 18 ரன்னுடனும், புரூக் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் ஆகாஷ்தீப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நாளை 3-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்