இந்தியாவுக்கு எதிரான போட்டி பெரியதுதான்... ஆனால் எங்களுக்கு இல்லை - பாக்.வீரர் பேச்சு
ஆசிய கோப்பையில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.;
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் இன்று துபாயில் நடைபெறுகின்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி போன்ற பந்து வீச்சாளர்களைக் கொண்ட இந்தியா போன்ற தரமான அணிக்கு எதிராக உங்கள் அணி ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட முடியுமா? என்று பாகிஸ்தான் வீரரான சைம் அயூப்பிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த சைம் அயூப், “நாங்கள் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் தைரியமான கிரிக்கெட்டை ஆட முயற்சிக்கிறோம். ரசிகர்களின் பார்வையில் இது ஒரு பெரிய போட்டியாக இருக்கலாம். ஆனால், அணியாக நாங்கள் அதை அப்படி பார்க்கவில்லை. இதை மற்ற எந்தப் போட்டியைப் போலவே சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். வீரர்களாகிய நாங்கள் ஒவ்வொரு நாளும் முன்னேற விரும்புகிறோம். அணியாக எங்கள் வீரர்களை ஒருவரை ஒருவர் நாங்கள் நம்புகிறோம்.
எங்களது 15 பேர் கொண்ட அணியில், ஒரு இரண்டு வீரர்கள் மட்டும் தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டும் என்று விரும்பவில்லை. முழு அணியின் ஒருங்கிணைந்த முயற்சியை விரும்புகிறோம். கடந்த 3-4 மாதங்களாக, அணி நிர்வாகம் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று முன்னேற வேண்டும் என்ற செய்தியை அளித்துள்ளது. கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல், எதிர்காலத்தை நோக்கி கவனம் செலுத்துகிறோம்.
முன்பு நடந்தவை பற்றி சிந்திக்காமல் தயாரிப்பு மற்றும் செயல்படுத்துதலில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். நாங்கள் இந்த தொடரை வெல்ல விரும்புகிறோம். இந்தியா-பாகிஸ்தான் போட்டியை மட்டும் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு சவாலாக இருக்கும். ஒவ்வொரு பந்து வீச்சாளரும் ஒரு சவால். ஆனால், அணிக்காக வெற்றி பெறுவதே எங்களது இலக்கு” என்று கூறினார்.