நாங்கள் சரியாக பேட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணம் - எய்டன் மார்க்ரம்

நிச்சயம் இந்த தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என எய்டன் மார்க்ரம் கூறியுள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

டர்பன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 107 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 203 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் 17.5 ஓவர்களில் 141 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க வீரர்கள் கிளாசன் 25 ரன்களும், கோட்சே 23 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி கண்ட தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் அளித்த பேட்டியில் கூறியதாவது, டாசில் வெற்றி பெற்று நாங்கள் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததெல்லாம் தவறு கிடையாது. இரண்டு அணியிலும் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருந்தனர். மைதானமும் பேட்டிங்கிற்கு சாதகமாக தான் இருந்தது. ஆனால் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடினார்.

அவரது ஆட்டம் காரணமாக எங்களது பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் அதிகரித்தது. அந்த அளவிற்கு அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் கோட்சே மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். இந்த போட்டியில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணம். நிச்சயம் இந்த தோல்வியிலிருந்து மீண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com