வீரர்கள் போராடிய விதம் பாராட்டத்தக்கது - சூர்யகுமார் யாதவ்
சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி சி.எஸ்.கே அபார வெற்றி பெற்றது.;
Image Courtesy: @IPL / @mipaltan
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை 19.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 65 ரன்னும், ருதுராஜ் 53 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் மும்பை பொறுப்பு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த போட்டியில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். ஆனால், இப்போட்டியில் எங்கள் அணி வீரர்கள் போராடிய விதம் பாராட்டத்தக்கது. இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதில் மும்பை இந்தியன்ஸ் அணி பெயர் பெற்றது.
மேலும், அவர்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இதனை செய்து வருகின்றனர். அவர்களின் இந்த செயல்முறையானது ஆச்சரியமாக இருக்கிறது. அதன் காரணமாக விக்னேஷ் அணிக்குள் வந்தார். இப்போட்டியில் நாங்கள் ரன்களை கொடுத்த காரணத்தால் விக்னேஷின் ஒரு ஓவரை தக்கவைக்க வேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன்.
ஆனால், அவருக்கு 18-வது ஓவரைக் கொடுப்பது ஒரு தவிர்க்க முடியாத செயலாக மாறியது. இரண்டாவது இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்த விதம் இந்த அட்டத்தை எங்களிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டது. இத்தொடரில் இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.