டெல்லிக்கு எதிரான வெற்றி... இவர்கள்தான் முக்கிய காரணம் - ரஜத் படிதார்
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.;
Image Courtesy: @IPL
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 162 ரன் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 41 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 18.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 165 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா 73 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது குருனால் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இது ஒரு முழுமையான அணியின் வெற்றியாக அமைந்தது. எங்களது பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பாக தங்களது திட்டத்தின் படி பந்துவீசி இருந்தனர்.
நான் ஏற்கனவே கூறியது போல எந்த மைதானத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியம் கிடையாது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கிறோம். இந்த போட்டியில் நாங்கள் சேசிங் செய்யும் போது எங்களுக்கு மைதானத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்தது. அதனால் மிகச்சிறப்பாக டார்கெட்டை எதிர்கொண்டோம்.
இந்த போட்டியில் பவுலர்கள் தான் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த சிறிய மைதானத்தில் இவ்வளவு குறைந்த இலக்கில் எதிரணியை கட்டுப்படுத்தியதால் எளிதாக இலக்கை நோக்கி செல்ல முடிந்தது. ஆர்.சி.பி அணிக்கு கேப்டனாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கேப்டனாக இருப்பது எனக்கு நல்ல அனுபவத்தையும் தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.