ஆட்ட நாயகன் விருது பெற்ற அபிஷேக் சர்மா கூறியது என்ன?

அபிஷேக் சர்மா 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்;

Update:2025-04-13 13:46 IST

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்களும், பரப்சிம்ரன் 42 ரன்களும் எடுத்தனர்.

ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கி விளையாடியது.இத்தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த நட்சத்திர கூட்டணி இம்முறை ஜொலித்தது. டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடினர்.

இந்த கூட்டணியை பிரிக்க பஞ்சாப் அணி 171 ரன்கள் விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் இருந்த அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இறுதியில், ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஐதராபாத் அணி தற்போது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற அபிஷேக் சர்மா கூறியாதவது,

நான் சரியாக விளையாடாத போதும் அணி நிர்வாகமும், கேப்டன் கம்மின்சும் என் மீது நம்பிக்கை வைத்தனர். எனக்கும், டிராவிஸ் ஹெட்டுக்கும் இந்த நாள் மிகவும் மிகவும் சிறப்பானது. தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன். இளம் வீரராக அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது மிகவும் கடிமனாக இருந்தது.

யுவராஜ் சிங்குக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். அவருடன் நான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறேன். அவரது அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. சூர்யகுமார் யாதவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடனும் தொடர்ந்து பேசி வருகிறேன்.என தெரிவித்தார் .

Tags:    

மேலும் செய்திகள்