இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எது நடந்தாலும் சுப்மன் கில்லை.. - இந்திய முன்னாள் வீரர் ஆதரவு

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எட்டிப்பிடித்து அசத்தியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இதற்கு பல முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் அதனை நினைத்து எந்த கவலையும் கொள்ளாத சுப்மன் கில் கேப்டனான முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். ஆனாலும் தனது கேப்டன்சி பயணத்தை தோல்வியுடன் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் ஒருவேளை இங்கிலாந்து தொடரில் தோல்வியை சந்தித்தாலும் சுப்மன் கில்லை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கக்கூடாது என இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார். இங்கிருந்து அவருக்கு குறைந்தது 3 வருடங்கள் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் சாஸ்திரி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சுப்மன் கில்லுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் நான் ஏமாற்றமடைவேன். பேட்டிங் செய்யும்போது அவருக்கு ஒரு ராஜரீக குணம் இருக்கும். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் முறையை கற்றுக்கொள்ள முடிந்தால் அவருடைய பெயரும் பெரிதாக வருவதைப் பார்க்க முடியும். தற்போது நிறைய முதிர்ச்சியைப் பெற்றுள்ள அவர் ஊடகங்களை சிறப்பாக கையாண்டு டாஸ் வீசும் போதும் நன்றாக பேசுகிறார்.

அவரை 3 வருடங்கள் கேப்டனாக இருக்க விடுங்கள். இந்தத் தொடரில் எது நடந்தாலும் தேவையின்றி மாற்றங்கள் செய்யாதீர்கள். அவருக்கு 3 வருடங்கள் வாய்ப்பு கொடுங்கள். அதைச் செய்தால் அவரால் தொடர் வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com