உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 207 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு
Published on

லண்டன்,

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 212 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித், வெப்ஸ்டர் அரைசதம் அடித்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 43 ரன்களுடன் ஊசலாடியது. கேப்டன் பவுமா (3 ரன்), டேவிட் பெடிங்ஹாம் (8 ரன்) களத்தில் இருந்தனர்.

2-வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான பந்து வீச்சு தாக்குதலை தென்ஆப்பிரிக்க பேட்டர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் எதிர்கொண்டனர். நிறைய பந்துகளை தொடவே இல்லை. இதனால் முதல் ஒரு மணி நேரம் விக்கெட் விழாமல் சமாளித்தனர். ஸ்கோர் 94 ஆக உயர்ந்த போது பவுமா (36 ரன், 84 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கம்மின்ஸ் பந்து வீச்சில் 'கவர்' திசையில் நின்ற லபுஸ்சேனிடம் சிக்கினார்.

இதைத் தொடர்ந்து பெடிங்ஹாம் ஒரு பக்கம் போராட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கம்மின்ஸ், அவர்களின் பேட்டிங் வரிசையை முற்றிலும் உருக்குலைத்தார். கைல் வெரைன் (13 ரன்), மார்கோ யான்சென் (0), கேஷவ் மகராஜ் (7 ரன்) சீக்கிரம் நடையை கட்டினர். பெடிங்ஹாம் தனது பங்குக்கு 45 ரன்கள் (111 பந்து, 6 பவுண்டரி) எடுத்தார்.

முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 57.1 ஓவர்களில் 138 ரன்னில் அடங்கியது. ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை அறுவடை செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு கேப்டனின் மகத்தான பந்து வீச்சாக இது பதிவானது. மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியாவும் பேட்டிங்கில் சொதப்பியது. முதல் இன்னிங்சில் டக்-அவுட் ஆன கவாஜா 2-வது இன்னிங்சிலும் சோபிக்கவில்லை. 6 ரன்னில், ரபடாவின் வேகத்துக்கு இரையானார். அதே ஓவரில் கேமரூன் கிரீனும் (0) வீழ்ந்தார். எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஸ்சேன் (22 ரன்), ஸ்டீவன் சுமித் (13 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை. ஆடுகளத்தில் பந்து சரமாரியாக 'ஸ்விங்' ஆனதால் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை துரிதமாக தாரை வார்த்தனர். டிராவிஸ் ஹெட் (9 ரன்), வெப்ஸ்டர் (9 ரன்), கம்மின்ஸ் (6 ரன்) உள்ளிட்டோர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அப்போது ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 73 ரன்களுடன் மோசமான நிலையில் தவித்தது.

இந்த நெருக்கடியான சூழலில் களம் கண்ட விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கணிசமாக ரன் எடுத்து ஒரு வழியாக ஆஸ்திரேலியாவை மூன்று இலக்கத்தை தொட வைத்தார். அலெக்ஸ் கேரி 43 ரன்களில் (50 பந்து, 5 பவுண்டரி) எல்.பி. டபிள்யூ. ஆனார். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 40 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து மொத்தம் 218 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. மிட்செல் ஸ்டார்க் (16 ரன்), நாதன் லயன் (1 ரன்) இருவரும் இன்று தொடர்ந்து பேட்டிங் செய்தனர். விரைவில் ஆல் அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டார்க் பொறுப்புடன் செயல்பட்டு ரன்களை திரட்டினார். அவர் 136 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 207 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் - ஹேசல்வுட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மொத்தமாக ஆஸ்திரேலிய அணி 281 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை விரட்டிப்பிடிக்க தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com