உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, நெதர்லாந்து தகுதி

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.
உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, நெதர்லாந்து தகுதி
Published on

பெர்லின்,

48 அணிகள் இடையிலான 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடக்கிறது. போட்டியை நடத்தும் நாடுகள் தவிர மற்ற நாட்டு அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். இதற்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

இதில் ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று போட்டியில் பங்கேற்றுள்ள 54 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.

இதன் ஏ பிரிவில் ஜெர்மனியின் லீப்சிக் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி, சுலோவக்கியாவை சந்தித்தது.

டிரா செய்தாலே தகுதி பெற்று விடலாம் என்ற நிலையில் களம் கண்ட ஜெர்மனி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் ஜெர்மனி அணி 6-0 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை பந்தாடி 21-வது முறையாக உலகக் கோப்பை போட்டிக்குள் கால்பதித்தது.

ஜி பிரிவில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடந்த இறுதி லீக் ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் லிதுவேனியாவை துவம்சம் செய்தது.

நெதர்லாந்து அணி 6 வெற்றி, 2 டிராவுடன் 20 புள்ளிகள் குவித்து தனது பிரிவில் முதலிடத்தை சொந்தமாக்கி 12-வது தடவையாக உலகக் கோப்பை போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

தகுதி சுற்று மூலம் இதுவரை 31 அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com