8 அணிகள் பங்கேற்கும் ஆக்கி இந்தியா லீக் - சென்னையில் இன்று தொடக்கம்

சென்னையில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - ஐதராபாத் டூபான்ஸ் அணிகள் மோதுகின்றன.;

Update:2026-01-03 08:04 IST

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் ஆக்கி இந்தியா அமைப்பு, ஆண்களுக்கான ஆக்கி இந்தியா லீக் போட்டியை 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. 2017-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 சீசன் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்த ஆக்கி தொடர் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. அதில் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த நிலையில் 7-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி இன்று (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை சென்னை, ராஞ்சி, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்ட ஆட்டங்கள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது.

இதில் அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ், நடப்பு சாம்பியன் பெங்கால் டைகர்ஸ், கலிங்கா லான்சர்ஸ், ராஞ்சி ராயல்ஸ், சூர்மா ஆக்கி கிளப், ஐதராபாத் டூபான்ஸ், எஸ்.ஜி. பைப்பர்ஸ், எச்.ஐ.எல். ஜி.சி, ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் தலைமையிலான தமிழ்நாடு டிராகன்ஸ் அணி, கடந்த ஆண்டு 2-வது இடத்தை பிடித்த சுமித் தலைமையிலான ஐதராபாத் டூபான்சை சந்திக்கிறது. சென்னை நகரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு டிராகன்ஸ் அணி உள்ளூர் சீசனை வெற்றியோடு தொடங்கும் முனைப்புடன் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்