ஆசிய கோப்பை ஆக்கி: பாகிஸ்தானுக்கு பதிலாக களமிறங்கும் வங்காளதேசம்..?
ஆசிய கோப்பை ஆக்கி தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
புதுடெல்லி,
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் வரும் 29-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, ஜப்பான், மலேசியா, ஓமன், சீன தைபே ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மற்றும் அதனைத்தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் கொடுத்த சரியான பதிலடிக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வருமா? என்பதில் சந்தேகம் நிலவியது.
ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியாவுக்கு வருவதற்காக விண்ணப்பித்தால் பாகிஸ்தான் அணிக்கு உடனடியாக ‘விசா’ வழங்க இந்தியா தயாராக இருந்தது.
இருப்பினும் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றான ஆசிய கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி விலகி இருக்கிறது. பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி பாகிஸ்தான் அணி இந்தியா வர மறுத்தது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலாக இந்த தொடரில் வங்காளதேச அணி களமிறங்க உள்ளதாக ஆக்கி இந்தியா நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.