உலகக் கோப்பை ஸ்குவாஷ்: எகிப்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்துக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.;
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் எகிப்தை சந்தித்தது. இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்துக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் வேலவன் செந்தில்குமார் 7-1, 7-3, 7-6 என்ற நேர்செட்டில் இப்ராகிம் எல்காபானியையும், அபய் சிங் 7-5, 6-7, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் ஆடம் ஹவாலையும் வீழ்த்தினர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 6-7, 7-5, 7-3, 3-7, 7-3 என்ற செட் கணக்கில் நூர் ஹெய்கலை போராடி சாய்த்தார்.
ஹாங்காங்-ஜப்பான் அணிகள் இடையிலான மற்றொரு அரையிறுதி ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஆனால் செட் கணக்கின் அடிப்படையில் ஹாங்காங் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.