ஆடாமல் ஜெயித்தோமடா... மென்சிக் விலகலால் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்
காலிறுதியில் லொரென்சோ முசெட்டி அல்லது டெய்லர் பிரிட்ஸ் ஆகிய இருவரில் ஒருவரை எதிர்த்து ஜோகோவிச் விளையாடுவார்.;
மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர், ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். இதன்படி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 18-ந்தேதி இந்த டென்னிஸ் போட்டி தொடர் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
இதில் இன்று, 8-ம் நாளுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் போட்டியில் விளையாட இருந்த ஜாகுப் மென்சிக் வயிற்று தசையில் ஏற்பட்ட காயத்தினால் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
இதனால், செர்பியாவை சேர்ந்த உலக தர வரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச், போட்டியில் விளையாடாமலேயே காலிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் 10 முறை வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த மியாமி ஓபன் இறுதி போட்டியில் ஜோகோவிச்சை மென்சிக் வீழ்த்தினார். இதனால், அவர்களுக்கு இடையேயான போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மென்சிக்குக்கு கடந்த சில போட்டிகளில் ஆடும்போதே காயம் தொடர்பான வலி அதிகரித்து வந்தது. இந்நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
இனி, காலிறுதியில் லொரென்சோ முசெட்டி அல்லது டெய்லர் பிரிட்ஸ் ஆகிய இருவரில் ஒருவரை எதிர்த்து ஜோகோவிச் விளையாடுவார்.