மும்பை

புகைப்பட கலைஞர்களை வலைதளத்தில் வசைபாடிய நடிகை அலியாபட்

மும்பை, 

இந்தி திரைத்துறையின் முன்னணி நடிகை அலியா பட். இவரது கணவர் நடிகர் ரன்பீர் கபூர். இவர்களுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. இதனிடையே, நடிகை அலியா பட் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, பிரபலங்களை புகைப்படம் எடுத்து விற்கும் சிலர் அவரை ரகசியமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகை அலியா பட், தன்னை புகைப்படம் எடுத்தவர்களை கடுமையாக சாடினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் வழக்கமான மதிய வேலையில் எனது வீட்டிற்குள் இருக்கும்போது என்னை யாரோ கவனிப்பது போன்று உணர்ந்தேன். நான் மேலே பார்த்தேன். அப்போது எனது எதிர் குடியிருப்பின் மாடியில் 2 பேர் கேமராக்களுடன் என்னை பார்ப்பதை கண்டேன். என்ன விளையாடுகிறீர்களா? எந்த உலகத்தில் இது சரியா மற்றும் அனுமதிக்கப்படுகிறதா? இது ஒரு தனிநபர் உரிமை மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். எதற்கும் எல்லையுண்டு. அந்த எல்லையை நீங்கள் மீறக்கூடாது. அனைத்து எல்லைகளும் இன்று மீறப்பட்டுவிட்டது" என கூறி இருந்தார்.

இந்தநிலையில் கார் போலீஸ் நிலைய அதிகாரிகள் நடிகை அலியாபட் பதிவு தொடர்பாக அவரை தொடர்புகொண்டு விசாரித்தனர். இருப்பினும் இதுகுறித்து முறையாக புகார் எதையும் பதிவு செய்யவில்லை என தெரிகிறது.

SCROLL FOR NEXT