விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் மார்க்கண்டேயன் நேற்று ரெட்டியப்பட்டி, மாதா ராஜபுரம், சங்கரப்ப நாயக்கன்பட்டி, கன்னிமார்கூட்டம், தத்தனேரி, துவரந்தை, மேல்மாந்தை, வைப்பார், கோட்டைமேடு, முத்துராமலிங்கம்பட்டி, கத்தாளம்பட்டி, துலுக்கன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அவருக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து விளாத்திகுளம் பத்திரகாளி அம்மன் கோவில் தெரு, காய்கறி மார்க்கெட், துளசிபட்டி, அம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
20 ஆண்டுகால அரசியலில் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை கேட்டறிந்து சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளேன்.
வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட ரூ.1.50 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மானாவாரி பயிர்களுக்கு இழப்பீடு ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேருவதற்கு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும்,
மாவட்டம்தோறும் செஸ் பயிற்சி மையம், கோழி வளர்ப்பு தொழிலில் ஆலோசனை வழங்கிட ஒருங்கிணைந்த கோழி வளர்ப்பு மையம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, வார்டு கவுன்சிலர்கள் சரண்யா ஸ்ரீதர், பிரதீபா, தாளமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். எட்டயபுரம் வெல்லும் தமிழ் பெண்கள் சார்பில் வேட்பாளர் மார்க்கண்டேயனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்