லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீடு, திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாடலாசிரியர் விவேகா பேசுகையில், "இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.
லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதைத்தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது அவரிடம், நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது "எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்," என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்," என்றார்
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், "நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா-பொண்ணு சம்பந்தப்பட்ட ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். நான்கு பேர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற, நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர் தான். ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர் தான். நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்து கொண்டு. திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம், எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.
இதனை மறைந்த வாலி ஐயா பாணியில் வாழ்த்திட வேண்டும் என்றால்.. "உங்களுக்கு யாரும் போட்டதில்லை ஆர்டர், உங்களுக்கு நீங்களே தான் பார்டர், என்றும் சோர்ந்ததில்லை உங்களுடைய ஷோல்டர், ஏனென்றால் நீங்கள் தான் உண்மையான லீடர்..." லீடர் -கண்டிப்பாக வின்னர்," என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், "லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான். பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்... அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றை சொன்னார், அந்த கதையில் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தயார்படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குநரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்," என்றார்.
தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், "லெஜெண்ட் சரவணனின் முதல் படத்தை பார்த்தேன், மிக பிரம்மாண்டமானதாக இருந்தது. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். எங்கள் நிறுவனத்தில் 'பட்டாசு' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார்தான் லீடர் படத்தை இயக்குகிறார், அதில் லெஜெண்ட் சரவணன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும், வெற்றி விழாவில் சந்திப்போம்," என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், "லெஜண்ட் சரவணன் சார், நீங்கள் வணிக உலகத்தில் மட்டும் அல்ல, இப்போது தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம். 'லீடர்' என்ற தலைப்போடு நீங்கள் வருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சினிமாவிற்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் உங்களிடம் தெளிவாக தெரிகிறது. வணிகத்தில் இவ்வளவு பெரிய சாதனை செய்த நீங்கள், அதே உறுதியுடன் சினிமாவிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்களுடன் உங்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவருடைய படங்கள் எப்போதும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும். அதுபோல இந்த 'லீடர்' படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ்சினிமாவில் அப்பா-மகள் உணர்வுகளை மையமாகக்கொண்ட படங்கள் எப்போதும் மக்களின் மனதைத் தொடும். 'தெறி', 'விஸ்வாசம்' போன்ற படங்கள் அதற்குச் சிறந்த உதாரணம். அதுபோல, 'லீடர்' படமும் உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜிப்ரான் அவர்களின் இசையும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். டிரெய்லரிலேயே அது தெளிவாக தெரிகிறது. மேலும், இந்தப்படத்தின் விளம்பரத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும் நிகில் முருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சரவணன் சார், உங்கள் சினிமா பயணத்தில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில், தரமான படங்களை வழங்க வேண்டும். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களைகொடுக்க வேண்டும் என்பதே எங்களின் வாழ்த்து. 'லீடர்' படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்றார்.
இந்தப் படம் வெளியான பிறகு ஆறு மாதம் வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்ல முடியாது. ஏனெனில் இந்தப் படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன். அதை நானாக சொல்லவில்லை இயக்குநர் எழுதிக் கொடுத்ததை தான் பேசி நடித்தேன். இந்தப் படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.
உணவுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் மாமனிதர் இவர், இவரை ஏன் நாங்கள் லீடர் என்று சொல்கிறோம் என்றால் அவருடைய பிறந்த ஊருக்கு ஊரில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு நாங்கள் எல்லாம் சென்றபோது, அந்த ஊருக்கே அவர் சாப்பாடு போடுகிறார். அங்கு நடைபெற்ற எல்லா படப்பிடிப்பு நாட்களிலும் ஊர் முழுவதும் இவர் விருந்து படைத்தார்," என்றார்.
பேபி இயல் பேசுகையில், "இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த 'டிக் டிக் டிக்' படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக உணர்கிறேன்.
கதாநாயகன் லெஜெண்ட் சரவணன் பேசுகையில், “லெஜெண்ட் படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் 'லீடர்'. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.
இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படபிடிப்பு தளத்தில் அறந்தாங்கி நிஷா, பேபி இயல், ஜார்ஜ் மரியன், பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ஷாம், லால், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள்.
இந்தத் திரைப்படம் 'ஜெயிலர்' போன்றோ அல்லது 'விக்ரம்' போன்றோ, 'லியோ' போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனெனில் அதற்குண்டான தகுதி அனைத்தும் 'லீடர்' படத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். வரும் குட் ஃப்ரைடே அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது, குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும்.
இந்த படத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை. கோடைகால விடுமுறையை 'லீடர்' உடன் கொண்டாடுங்கள்.
‘கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை, எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாக தான் நடக்கும். நாம அவங்கள தான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க’ என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்," என்றார்.
லீடர்' திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, 'லீடர்' உருவாகியுள்ளது.
இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வரும். ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.