ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், ஏரல் அருகேயுள்ள பெருங்குளத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் அப்பகுதியில் வீதி, வீதியாக சென்று கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர் பேசியதாவது:-
எனது தந்தை ஊர்வசி செல்வராஜ் இந்த தொகுதியில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். அதேபோல் நான் ஐந்தாண்டு காலத்தில் சிறந்த முறையில் பணி செய்தேன். பொது மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்தேன். இந்த தேர்தலில் கை சின்னத்தில் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக பணியாற்ற, வெற்றி பெற செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளார். அதில் ரூ.8 ஆயிரம் மத்திப்பிலான கூப்பன் திட்டம், ஏற்கனவே வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை இனி ரூ.2 ஆயிரமாக உயர்த்தியுள்ள திட்டங்கள் கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழக மக்களுக்கு நல்ல நல்ல திட்டங்களை தி.மு.க. அரசுதான் கொண்டு வரும்.
மக்களை தேடி மருத்துவ திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு என்னென்ன தேவைகள் என அறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.
மாணவ மாணவிகளுக்கு மீண்டும் லேப்டாப் கொடுப்பதாக அறிவித்துள்ளார். மகளிர் சுய உதவி குழுவினர் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. என்ற கட்சியில் முதுகில் அமர்ந்து கொண்டு பா.ஜ.க. தமிழகத்தில் காலுன்ற முயற்சிக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு வாக்கு அளித்தால் அது பா.ஜ.க.விற்கு மறைமுகமாக வாக்கு அளித்தது போல் ஆகிவிடும். எனவே தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற நாம் அனுமதிக்கக் கூடாது.
மீண்டும் எம்.எல்.ஏ. ஆனவுடன் சில கிராமங்களில் குடிதண்ணீர், பஸ் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க தொழிற்சாலைகள் கொண்டு வரவும் முயற்சி செய்வேன்.
மேலும் நான் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம் பகுதியில் ஊர்வசி அகாடமி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இதில் படித்த மாணவ, மாணவிகள் நல்ல வேலைகளில் உள்ளனர். நான் வெற்றி பெற்றவுடன் மேலும் சில ஊர்களில் இந்த இலவச அகாடமி தொடங்குவேன்.
அதேபோல் தொகுதியிலிருந்து 25 மாணவ, மாணவிகளுக்கு சென்னையில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் 4 ஆண்டுகளுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம் முற்றிலும் வழங்கி இலவசமாக படிக்க வைத்து வருகிறேன். இனி 30 மாணவ, மாணவியரை படிக்க வைப்பேன். இந்த வாய்ப்பை இப்பகுதி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். எனவே, தமிழகத்தில் மீண்டும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவதற்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்கள் கை சின்னத்திற்கு வாக்குகள் அளித்து என்னை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்..
அவருடன், பெருங்குளம் தி.மு.க. முன்னாள் நகர செயலாளர்கள் சுடலை, பாலமுருகன், வார்டு செயலாளர் சூரி, வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், மாவட்ட பொதுச் செயலாளர் சிவகளை பிச்சையா, நகர தலைவர்கள் பெருங்குளம் ஜெபமாலை, சாயர்புரம் இசைசங்கர், முன்னாள் நகர தலைவர் பெருங்குளம் மூக்காண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன், மாவட்ட பொருளாளர் எடிசன், மாநில ஊடகப்பிரிவு முத்துமணி, வக்கீல் பாலசுப்பிரமணியன் உட்பட தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டு, அவருக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகால், தென்கால் பாசனத்திற்கு முறையாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்து, விவசாய பணிகள் செம்மையாக நடக்க உதவியுள்ளேன். விவசாயிகள் விடுக்கும் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளேன். தொகுதி முழுவதும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்துள்ளேன். தொகுதி முழுவதும் தரமான சாலைகள் போடப்பட்டு உள்ளன. ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.