சென்னை,
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அண்ணாவின் நினைவு நாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த
சாமானிய மனிதன்!
தலைமுறைகள் தாண்டி,
எல்லோரும் விரும்பி விளிக்கும்
"அண்ணா"!
"தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்"
என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று...
அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.
அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் இயக்கத்தின் வரலாற்று கடமையாகும். மக்கள் துணையோடு இந்த விடியா திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்
#அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் நிறுவிடுவோம்! அதுவே நம் பேரறிஞர் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
அண்ணா நாமம் வாழ்க! என அதில் பதிவிட்டுள்ளார்.