வார ராசிபலன்

வார ராசிபலன் 08-03-2026 முதல் 14-03-2026 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

2026 மார்ச் 8 முதல் 14 வரை (மாசி 24 - 30 வரை) வார ராசி பலன் குறித்த முழு விவரத்தை இங்கு காண்போம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு மனவலிமையும், காரிய சித்தியும் உண்டாகும். ராசிநாதன் சஞ்சாரத்தால் தடைப்பட்ட பணிகளில் வேகம் பிறக்கும். சாதனைகள். ஆளுமைத் திறன் வெளிப்பட்டு சமூக மதிப்பைப் பெற்றுத் தரும்.

சுற்றத்தார், நண்பர்களுடனான உறவு பலப்படும். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அரசியல் துறையினருக்கு பொறுப்புகளும், பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கும் உயரும் வாரமிது.

குரு பகவானின் வக்ர நிவர்த்தியால் தொழில், வணிக ரீதியாக லாபம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், இடமாற்றமும், புதிய தொழில் முனைவோருக்கு அரசு உதவியும் கிடைக்கும்.

உஷ்ணம் சார்ந்த பாதிப்புகள் வந்து நீங்கும். அதிகாலை நடைப்பயிற்சியும், போதிய நீர் அருந்துவதும் அவசியம். அம்பிகைக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபடுவதும், உணவில் காரத்தைக் குறைப்பதும் நன்மை தரும்..

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு யோகமான வாரம். ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கையும், வசதி வாய்ப்பும் பெருகும். புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். மனதிலிருந்த குழப்பம் நீங்கி வெற்றி நடை போடுவீர்கள்.

குடும்ப உறவுகளுக்குள் ஒற்றுமை நிலவும். பிரிந்த நண்பர்களுடன் சுமுக உறவு நீடிக்கும். சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவும், சமூக அந்தஸ்து உயரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். கூட்டுத் தொழிலில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் எச்சரிக்கை அவசியம்.

கண்கள் தொடர்பான சிறு உபாதைகள் ஏற்படும். உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நலம். சிவபெருமானுக்கு நெய் தீபமிட்டு வழிபடுவதும், அதிகாலையில் தியானம் மேற்கொள்வதும் சிறந்தது.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு பொறுமையும், விவேகமும் தேவைப்படும் வாரம். குரு வக்ர நிவர்த்தியால் குழப்பம் நீங்கித் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நிலுவையில் இருந்த அரசு காரியங்கள் கைகூடும். இலக்குகளை அடைவீர்கள்.

குடும்ப மூத்தவர் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நன்மை தரும். நண்பர்களிடையே மனக்கசப்பு நீங்கும். சமூக உறவுகளில் புதிய அறிமுகங்கள் கிடைப்பதோடு, அவர்கள் மூலம் எதிர்காலத்தில் உதவிகள் பெருகும்.

தொழில் துறையினருக்கு சுறுசுறுப்பு உண்டாகும். வீண் செலவுகளைக் குறைப்பது அவசியம். வெளிநாட்டுத் தொடர்பு உண்டு. பணியிடத்தில் வேலைப்பளு குறையும். சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

நரம்பு சம்பந்தமான சிக்கல் ஏற்படக்கூடும். நல்ல உறக்கமும், உடற்பயிற்சியும் உடல் நலம் காக்கும். தினசரி பிள்ளையார் வழிபாடு செய்வதும், பச்சை நிற ஆடைகளை அணிவதும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு உணர்ச்சியை விட அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம். பல நன்மைகள் நடக்கும். சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். முயற்சிகள் வெற்றி பெறும். புதிய செய்திகள் உற்சாகம் தரும்.

சுற்றத்தார் உங்களை போற்றுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். நண்பர்களுடன் நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொண்டு மகிழ்வீர்கள்.

உத்தியோகத்தில் சுயமாகச் சிந்தித்துச் செயல்படவும். வணிகர்களுக்கு பழைய கடன் வசூலாகும். புதிய கிளை தொடங்கலாம். ஏற்றுமதி-இறக்குமதியில் லாபம் இரட்டிப்பாகும். பங்குச் சந்தை முதலீட்டில் மிதமான லாபம் கிடைக்கும்.

ஜீரண சிக்கல்கள் ஏற்படும் என்பதால் வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பெருமாளுக்குப் பால் அபிஷேகம் செய்வதும், தினசரி மற்றும் பௌர்ணமி தினங்களில் சந்திர தரிசனம் செய்வதும் மனக் குழப்பங்களைத் தீர்க்கும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு ராசிநாதன் சஞ்சாரம் செல்வாக்கு தரும். தடைப்பட்ட காரியங்கள் திடீரென முடிவாகும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உங்கள் தலைமைப் பண்பு மேலோங்கும். சாதனைகள் தொடரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு உங்கள் வளர்ச்சிக்கு உதவும். அரசியலில் எதிர்ப்புகள் விலகும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குச் சந்தையில் அவசரம் தவிர்க்கவும். அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். வணிகர்கள் புதிய சந்தையில் லாபம் பெறுவர். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

முதுகு வலி, எலும்பு தொடர்பான உபாதைகள் வந்து விலகும். சூரிய நமஸ்காரம், பெரியோர் ஆசிகள் மன பலம் தரும். போதுமான அளவு ஓய்வு எடுப்பதுடன், காரமான உணவுகளைக் குறைப்பதும் அவசியம்.

கன்னி

கன்னி ராசியினர் திட்டமிட்டுச் செயல்பட்டு வெற்றியடையும் வாரம். அறிவுத்திறன் மிளிரும். எழுத்து, கலைத்துறையினருக்கு அங்கீகாரம் கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சுமுகமான முடிவு எட்டப்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர் வருகை உற்சாகம் தரும். பொதுமக்களிடையே நற்பெயர் கிடைக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை பலப்படும். பொது விழாக்களில் கௌரவிக்கப்படுவீர்கள்.

வேலையில் சவால்களை முறியடிப்பீர்கள். வியாபார போட்டியில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலைமை, புதிய தொழில் முதலீடுகள் லாபகரமாக அமையும். தகவல் தொடர்பு துறையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

தோல் சார்ந்த அலர்ஜிகள் ஏற்படலாம். துளசி தீர்த்தம் உட்கொள்வதும், ஆஞ்சனேயர் தரிசனமும் நன்மை தரும். எளிமையான உடற்பயிற்சிகளை அன்றாட வழக்கத்தில் செய்து வருவது உடலுக்கு நலம் பயக்கும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு மகிழ்ச்சியான வாரம். ராசிநாதன் பலத்தால், கலை உணர்வு, படைப்பாற்றல் மேம்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் முடிவுக்கு வரும். நிம்மதியும், சுறுசுறுப்பும் கூடும்.

குடும்ப உறவுகளில் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர் ஆலோசனை தக்க சமயத்தில் உதவும். அரசியல் துறையினர் அதிகார மையங்களுடன் நெருக்கம் காட்டுவார்கள். சுப நிகழ்ச்சி சுமுகமாக முடியும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

உத்தியோகத்தில் உரிய அங்கீகாரம் ஊதிய உயர்வு கிடைக்கும். சிறுதொழிலில் லாபம் சீராக இருக்கும். புதிய தொழில் கைகூடும். ரியல் எஸ்டேட்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.

சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு விலகும். காளி, துர்க்கைக்கு அர்ச்சனை செய்வது, பால் அபிஷேகம் செய்வதன் மூலம் தடைகள் விலகும். தூய்மை பணியாளர், உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை தானம், அன்னதானம் செய்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் துணிச்சலாக செயல்படும் வாரம் இது. இழந்த செல்வாக்கு திரும்பவும் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். முக்கியமான நேரங்களில் தீர்மானமான முடிவுகளை எடுப்பதால் நன்மைகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டு. அரசியல் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகை விலகும்.

தொழில்துறையினருக்கு வங்கி கடன் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர் ஆதரவு பெருகும். புதிய தொடர்புகள் மூலம் லாபம் அதிகரிக்கும். கடன்கள் தீரும்.

தலைவலி மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தமான சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். மகாலட்சுமி தாயாருக்கு தினசரி நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், பசுமாட்டுக்கு சுரைக்காய் அல்லது பூசணிக்காய் உணவாக தருவதும் நல்லது.

தனுசு

தனுசு ராசியினருக்கு அமைதியும் பொறுமையும் தேவைப்படும் வாரம். ராசிநாதன் வக்ர நிவர்த்தியால் மாற்றங்கள் உண்டு. சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் ஏற்படும். முயற்சிகள் பலன் தரும்.

குடும்பத்தில் மனம் விட்டு பேசுங்கள். அதன் மூலம் பல சங்கடங்கள் விலகும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கூடும். மேலிட தொடர்புகளால் லாபம் உண்டு. பொதுப்பணியில் உங்கள் பங்கு அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் பணி சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் லாபம் உண்டு. மாணவர்கள் சாதனை புரிவார்கள். புதிய சொத்துக்கள் சேர்க்கை உண்டு. பண வரவில் உள்ள தடைகள் விலகும்.

கை கால்களில் வலி ஏற்பட்டு வைத்தியத்தால் விலகும். தினமும் நடைபயிற்சி செய்வது அவசியம். மாலை நேரங்களில் சிவலிங்கத்துக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், இரவில் நாய்களுக்கு உணவிடுவதும் நல்லது.

மகரம்

மகர ராசியினருக்கு இந்த வாரம் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மனதில் இருந்த பயம் அகலும். தெளிவான சிந்தனைகள் உதயமாகும். சமூகத்தில், குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும்.

பொது காரியங்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். உறவினர்கள், உடன் பிறந்தோர் தொடர்பு மகிழ்ச்சி தரும். குழந்தைகளின் கல்வி மனதிற்கு மகிழ்ச்சி தரும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய தெம்பு ஏற்படும்.

பணியிடத்திலிருந்து சிக்கல்கள் விலகும். பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்பட வேண்டும். கூட்டு தொழிலில் லாபம் உண்டு. நிதி விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.

பற்கள் மற்றும் காது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். ஒரு சிலருக்கு மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படும். ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு, நெய் தீபம் ஏற்றி வழிபடவும். உணவில் அசைவத்தை தவிர்ப்பது நல்லது.

கும்பம்

கும்ப ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் கதவை தட்டும் காலகட்டம் இது. ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடி வரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய சிந்தனைகளால் மனம் மகிழும்.

குடும்ப உறவுகளிடையே கனிவான பேச்சு அவசியம். நண்பர்கள் ஆலோசனை உங்கள் வளர்ச்சிக்கு உதவும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அங்கீகாரம் பதவி கிட்டும். மற்றவர்களுக்கு செய்த உதவி திரும்ப உங்களிடம் வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய மாற்றங்கள் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் ஆகும். புதிய கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி பெறும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் நிதிநிலை உயரும்.

வாயுத்தொல்லை வயிற்று தொல்லை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். தினமும் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொண்டு சூரிய தரிசனம் செய்வது நல்லது.

மீனம்

மீன ராசியினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் வாரம் இது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீண்ட நாள் விருப்பம் ஒன்று நிறைவேறும். மனதில் உள்ள பாரம் விலகும். தீர்த்த தல யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டு.

குடும்பத்தில் எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். உறவினர் நண்பர்களுடன் பகை விலகும். அரசியலில் உள்ளவர்களுக்கு சோதனைகள் சாதனைகள் ஆகும். விடுபட்ட சொந்தங்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு கூடும். வியாபாரிகள் புதிய கிளைகளை தொடங்கி, தொழில் விரிவாக்கம் செய்யலாம். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். பெண்கள் மன உறுதி கூடும்.

உடல் சோர்வு காரணமாக தூக்கமின்மை ஏற்பட்டு நீங்கும். அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வது, மகான்கள் அல்லது தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது, பசுக்களுக்கு அகத்திக்கீரை அளிப்பது நலம் பல தரும்.