புதுடெல்லி,
இந்தியாவில் மின்சார கார் மற்றும் எஸ்யூவி (SUV) வாகனங்களின் ஆண்டு விற்பனை முதல் முறையாக 3 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்கள், அழகான வடிவமைப்புகள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைக் காட்டிலும் சிக்கனமான செலவு ஆகிய காரணங்களால், மின்சார வாகனங்களை அதிகம் விரும்புகின்றனர்.
இதனால் இந்திய சந்தையில் மின்சார வாகன விற்பனையானது இந்த ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஜனவரி முதல் நவம்பர் 9-ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 3,04,701 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆண்டு முடிய இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் மின்சார பயணிகள் வாகனங்களின் (e-PV) விற்பனை புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஒரு காலத்தில் தொடக்க நிலையில் இருந்த மின்சார பயணிகள் வாகனத் துறை, இப்போது முழுமையான வளர்ச்சியை எட்டியுள்ளதற்கு சான்றாக, ஒரு ஆண்டில் சில்லறை விற்பனை முதன்முறையாக 3,00,000 வாகனங்களைக் கடந்திருக்கிறது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் 'வாஹன்' (Vahan) இணையதள தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் நவம்பர் 9 வரையிலான காலத்தில், மின்சார கார்கள், எஸ்யூவிகள் (SUVs) மற்றும் எம்பிவிகள் (MPVs) என மொத்தம் 3,04,701 வாகனங்கள் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்ட விற்பனையைக் காட்டிலும் 66 சதவீத வளர்ச்சியாகும்.
நடப்பு ஆண்டு முடிவதற்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், இந்த வகை வாகனங்களின் விற்பனை ஏற்கனவே முந்தைய ஆண்டின் (CY2025) மொத்த விற்பனையான 1,95,571 வாகனங்களை விட, 1,09,130 வாகனங்கள் (அதாவது 56 சதவீதம்) கூடுதலாக உள்ளது.
ஜூன் மாதத்திலிருந்து மாதாந்திர விற்பனையில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மின்சார பயணிகள் வாகனங்களின் (e-PV) விநியோகம் முதன்முறையாக 30,000 என்ற எண்ணிக்கையைக் கடந்தது. இந்த வளர்ச்சி தொடர்ந்து 5 மாதங்களாக நீடித்து வருகிறது.
நான்காம் காலாண்டிலும் இதே வலுவான வளர்ச்சி வேகம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வளர்ச்சி அதிகரித்தால் இந்திய மின்சார பயணிகள் வாகனத் துறை, 2026-ஆம் ஆண்டு முடிவில் 3.50 லட்சம் முதல் 3.60 லட்சம் வரையிலான சாதனை அளவிலான சில்லறை விற்பனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.