மாருதி சுசூகி நிறுவனம் 
ஆட்டோமொபைல்

உற்பத்தி செலவு அதிகரிப்பு... கார்களின் விலையை உயர்த்தியது மாருதி சுசூகி

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 3 முறை விலை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி இந்தியா கார் நிறுவனம், குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையை உயர்த்தி உள்ளது. நேற்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.

அடுத்தடுத்து விலை உயர்வு

விலை குறைப்புக்கு மேற்கொண்ட முயற்சிகளையும் மீறி, உற்பத்தி செலவு அதிகரித்து நிறுவனத்தின் லாபத்தை பாதித்து வருவதால், விலையில் மாற்றம் செய்துள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் கூறியுள்ளது. சராசரியாக 0.31 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிலவும் செலவு அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாட்களின் விலையை உயர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மாருதி சுசூகி, பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. எந்த மாடல்களுக்கு விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அந்த அறிக்கையில் வெளியிடப்படவில்லை. வாடிக்கையாளர்கள் டீலரிடம் இருந்து புதுப்பிக்கப்பட்ட விலைப்புள்ளியைப் பெற்றுக்கொள்ளலாம்.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 3 தடவையாக விலை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் சேர்த்தால் 1 சதவீதத்திற்கும் சற்று அதிகம் ஆகும்.

விற்பனை அதிகம்.. லாபம் குறைவு

மாருதி சுசூகியின் காலாண்டு வாகன விற்பனை சாதனை அளவாக இருந்தபோதிலும், ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 26.36% சரிந்து ரூ.2,466.1 கோடியாகக் குறைந்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதலுடன் ஓரளவு தொடர்புடைய அதிக உள்ளீட்டுச் செலவுகள், உயர்ந்த விற்பனை விலைகள் மற்றும் விற்பனை அளவுகளால் கிடைத்த ஆதாயங்களை ஈடுசெய்ததால், அதன் EBITDA லாப வரம்பும் முந்தைய ஆண்டின் 12.7%-இலிருந்து 9.4%-ஆக சுருங்கியது.

பண்டிகை காலத் தேவை, வலுவான ஆர்டர் நிலுவை மற்றும் டீலர்களிடம் போதுமான இருப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இரட்டை இலக்க விற்பனை வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளது.

ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் உள்நாட்டு விநியோகம் 31.6% அதிகரித்து 11.46 லட்சம் வாகனங்களாக உயர்ந்தது. குறிப்பாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனை அளவு குறைவாக இருந்ததும் இந்த உயர்வுக்கு ஓரளவு உதவியது.

SCROLL FOR NEXT