மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம், புனேவின் சாக்கனில் உள்ள தனது உற்பத்தி ஆலையில், புதிய எலெக்ட்ரிக் ஜிஎல்சி சொகுசு காரின் (Mercedes-Benz Electric GLC SUV) உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் அந்நிறுவனத்தின் மின்மயமாக்கல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
நடுத்தர அளவு வாகன பிராண்டின் புதிய தலைமுறை மின்சார வாகனக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் மாடல் இந்த எலக்ட்ரிக் ஜிஎல்சி சொகுசு கார் ஆகும்.
இந்த சொகுசு கார் இந்தியாவில் ரூ.78.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சாக்கன் ஆலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த காரை அறிமுகம் செய்து, அதில் பயணித்தார்.
இந்திய சந்தையில் இந்த எஸ்யூவி வாகனம், GLC400 என்ற பெயரில் கிடைக்கிறது. இது 94kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 711 கி.மீ. தூரம் வரை செல்லும் என கூறப்பட்டுள்ளது. DC ஃபாஸ்ட் சார்ஜரில் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், கூடுதலாக 300 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும் என மெர்சிடிஸ் கூறுகிறது.
இதன் இரட்டை மோட்டார் அமைப்பு 482.4bhp மற்றும் 800Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது, இது அதன் பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த வாகனங்களில் ஒன்றாக விளங்குகிறது. புறப்பட்ட 4.3 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும்.
இந்த காரின் நீளம் 4.85 மீட்டராகவும், வீல்பேஸ் 2.97 மீட்டராகவும் உள்ளது, இது அதன் பிரிவு மற்றும் வகையிலேயே மிகப்பெரிய வாகனங்களில் ஒன்றாக அமைகிறது. காரின் சிறப்பம்சங்களில் MBUX ஹைப்பர்ஸ்கிரீன், டால்பி அட்மாஸுடன் கூடிய பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், பனோரமிக் கிளாஸ் ரூஃப், முன் இருக்கை பயணிகளுக்கான வென்டிலேட்டெட் மற்றும் மசாஜ் வசதி, முழு-LED லைட் பேக்கேஜ், பவர்-ஃபோல்டிங் இரண்டாம் வரிசை இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள், லெவல் 2 ADAS, ஆட்டோ-பார்க் வசதி, மற்றும் 128-லிட்டர் ஃபிரங்குடன் கூடிய 570-லிட்டர் பூட் ஆகியவை அடங்கும்.
வடிவமைப்பைப் பொறுத்தவரை, இந்திய சந்தையில் கிடைக்கும் GLC EV, எலக்ட்ரிக் AMG கிரில், 20-இன்ச் AMG ஸ்பெக் வீல்கள், அலுமினியம் ரன்னிங் போர்டுகள் மற்றும் கனெக்டெட் டெயில் லேம்ப்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய AMG டிசைன் பேக்குடன் வருகிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், 2026-ஆம் ஆண்டில் உற்பத்தி நடவடிக்கைகள், டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் மற்றும் புதிய தயாரிப்புத் திட்டங்களுக்காக கூடுதலாக ரூ. 200 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து, இந்தியாவில் அந்நிறுவனம் செய்துள்ள மொத்த முதலீடு ரூ.3,200 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் செயல்படும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களுள் இதுவே மிக அதிகபட்ச முதலீடு என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திறன்: 360 kW (489 hp)
டார்க் (Torque): 800 Nm
பேட்டரி: 94 kWh
ரேஞ்ச் (Range): 711 கி.மீ வரை (WLTP தரநிலையின்படி)
0-100 கி.மீ/மணி வேகம்: 4.3 வினாடிகள்
சார்ஜிங்: 330 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்
டிரைவ் டிரெய்ன்: இரட்டை-மோட்டார் AWD (4MATIC)
விலை: ரூ.78.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)