Image credits : Ai 
ஆட்டோமொபைல்

புதிய வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்; மத்திய அரசு அறிவிப்பு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் திருத்தம் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

6 ஆண்டுகள் வரை பழமையான பி.எஸ்.-6 தனியார் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, 6 ஆண்டுகள் வரை பழமையான பி.எஸ்.-6 தனியார் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் திருத்தம் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் வாகனத்தின் வயது, மாசு உமிழ்வு தரம் மற்றும் தனியார் அல்லது வணிக பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய விதிகளின்படி சான்றிதழ் செல்லுபடியாகும் காலம்:

• பி.எஸ்.-1, பி.எஸ்.-2, பி.எஸ்.-3 வாகனங்கள் - 3 மாதங்கள்.

• பி.எஸ்.-4 வாகனங்கள் - 6 மாதங்கள்.

• 6 ஆண்டுகள் வரை பழமையான பி.எஸ்.-6 தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் - 3 ஆண்டுகள்.

• 6 முதல் 10 ஆண்டுகள் வரையிலான பி.எஸ்.-6 தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் - 1 ஆண்டு.

• 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பி.எஸ்.-6 தனியார் வாகனங்கள் - 6 மாதங்கள்.

வணிக வாகனங்களுக்கு என்ன விதிமுறை?

டாக்சி, பேருந்து, லாரி உள்ளிட்ட பி.எஸ்.-6 வணிக வாகனங்களுக்கு 6 ஆண்டுகள் வரை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற வேண்டும். 6 முதல் 10 ஆண்டுகள் வரையிலான வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் சான்றிதழ் புதுப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே சான்றிதழ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களின் கால அவகாசம் தானாக நீட்டிக்கப்படாது. தற்போதைய சான்றிதழ் காலாவதியாகும் வரை அது செல்லுபடியாகும். அதன் பின்னர் முதல் முறையாக புதுப்பிக்கும்போதுதான் புதிய விதிமுறைகளின்படி கால அவகாசம் வழங்கப்படும். மேலும், ஏற்கனவே உள்ள சான்றிதழ் காலாவதியாகும் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பாக புதுப்பித்தால், புதிய சான்றிதழ் பழைய சான்றிதழ் காலாவதியாகும் தேதியில் இருந்து கணக்கிடப்படும். காலாவதியான பிறகு புதுப்பித்தால், புதுப்பிக்கும் நாளில் இருந்தே புதிய சான்றிதழ் செல்லுபடியாகும். இதன் மூலம் புதிய மற்றும் குறைந்த மாசு வெளியிடும் வாகனங்களுக்கு சான்றிதழ் புதுப்பிக்கும் சிரமம் குறைக்கப்படுவதுடன், பழைய வாகனங்களின் மாசு வெளியேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT