ஆட்டோமொபைல்

மொபைல் உற்பத்தி மூலமாக மத்திய அரசுக்கு ரூ.3.25 லட்சம் கோடி வரி வருவாய்

நேர்முக வரியாக 25,000 கோடி ரூபாயும், ஜி.எஸ்.டி, வரியாக 3 லட்சம் கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.

புதுடெல்லி,

மொபைல் போன் உற்பத்திக்கான 'பி.எல்.ஐ.' எனப்படும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 19,000 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அரசுக்கு 3.25 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தைக்கு ஏற்றுமதி

இந்தியா தனது உள்நாட்டுத் தேவைக்கான மொபைல் போன்கள் மற்றும் அதன் முக்கிய உதிரிபாகங்களுக்கு பிற நாடுகளையே முழுமையாகச் சார்ந்திருந்தது. ஆனால், 'மேக் இன் இந்தியா' (இந்தியாவிலேயே தயாரிப்போம்) இயக்கம் மற்றும் 'உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை போன்ற அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் இந்த நிலையை தலைகீழாக மாற்றியுள்ளன.

இன்று, உலக நாடுகளுக்கு ஸ்மார்ட்போன்களையும் அதன் அதிநவீன உதிரிபாகங்களையும் வினியோகிக்கும் ஒரு முன்னணி உலகளாவிய ஏற்றுமதி மையமாக இந்தியா அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் உற்பத்திப் பிரிவுகளை அமைத்து. இங்கிருந்து உலக சந்தைக்கு மொபைல்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.

அஷ்வினி வைஷ்ணவ்

பொதுப்பணத்தைப் பயன்படுத்தி செல்போன் உற்பத்திக்கு மானியம் வழங்குவதாக எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களுக்கான செலவு, ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருப்பதாக ஊடகங்களும் விமர்சித்திருந்தன. இந்தநிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தரவுகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

ரூ.25 ஆயிரம் கோடி

அதன்மூலம் மொபைல் போன் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் அரசு ரூ.19 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, இந்தத் திட்டத்தின் பயனாளிகளிடமிருந்து நேரடி வரியாக ரூ.25 ஆயிரம் கோடியும், ஜி.எஸ்.டி. வரியாக ரூ.3 லட்சம் கோடியும் என மொத்தம் ரூ.3.25 லட்சம் கோடி வருவாயை அரசு ஈட்டியுள்ளது. மின்னணு உற்பத்தித் துறையில் 25 லட்சம் பேரும். மொபைல் உற்பத்தித் துறையில் மட்டும் 12 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது.

இறக்குமதி 0.02 சதவீதமாக குறைவு

கடந்த 10 ஆண்டுகளில் மொபைல் போன் இறக்குமதி உள்நாட்டுத் தேவையில் 75 சதவீதத்தில் இருந்து 0.02 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் ரூ.2 லட்சம் கோடி மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மின்னணு பொருட்கள் உற்பத்தி ரூ.1.9 லட்சம் கோடியில் இருந்து ரூ.11.3 லட்சம் கோடியாகவும், மொபைல் போன் உற்பத்தி ரூ.1,800 கோடியில் இருந்து ரூ.5.5 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.

ஏற்றுமதி ரூ.3 ஆயிரத்து 800 கோடியில் இருந்து ரூ.3.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.62 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான புதிய மொபைல் போன் உற்பத்தித் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவை அக்டோபர் 2028 என அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT