ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் மின்சார மோட்டார் சைக்கிளான 'ப்ளையிங் ப்ளீ சி6' இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட இலகுரக ராணுவ மோட்டார் சைக்கிளின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ப்ளையிங் ப்ளீ சி6 பைக்கின் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.79 லட்சம்.
பேட்டரிக்கு தனியாக வாடகை அல்லது சந்தா செலுத்தும் திட்டத்தில் (BaaS) ரூ.1.99 லட்சத்தில் கிடைக்கிறது. அதாவது இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு பைக் மட்டுமே சொந்தம், பேட்டரிக்குத் தனியாக வாடகை அல்லது சந்தா செலுத்த வேண்டும். சந்தா முறையில் பேட்டரியின் ஆயுள் மற்றும் பராமரிப்புப் பொறுப்பு நிறுவனத்திடமே இருக்கும்.
3.91 கிலோவாட்ஸ் ஹவர் திறன் கொண்ட பேட்டரியுடன் வரும் இந்த பைக்கில், 15.4 கிலோவாட்ஸ் திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 60 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்துகிறது. மணிக்கு அதிகபட்சம் 115 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த பைக், 0-ல் இருந்து 60 கி.மீ. வேகத்தை 3.7 விநாடிகளில் எட்டும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 154 கி.மீ. வரை செல்லும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 65 நிமிடங்கள் ஆகும்.
124 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் அலுமினிய சட்டகம், வித்தியாசமான முன்பக்க கிர்டர் போர்க் சஸ்பென்ஷன் ஆகியவை சிறப்பம்சங்களாகும். 3.5 அங்குல தொடுதிரை, கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதல், கீலெஸ் வசதி, வயர்லெஸ் மொபைல் சார்ஜிங், குரூஸ் கண்ட்ரோல் ஆகிய தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. சாய்வைக் கணித்து செயல்படும் ஏ.பி.எஸ். பிரேக்கிங், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. நகரப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் சிட்டி, ரெயின், ஹைவே, ஸ்போர்ட் மற்றும் விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி என ஐந்து ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே, கொச்சி ஆகிய நகரங்களில் முன்பதிவு மற்றும் சோதனை ஓட்ட வசதி கிடைக்கிறது.