உலகின் முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான யமஹா, இந்தத் துறைக்கு வந்தது தற்செயலாக நிகழ்ந்த விபத்து என்றால் நம்ப முடிகிறதா? பியானோ தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்த யமஹா எப்படி மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் களமிறங்கியது என்பதைப் பார்க்கலாம்.
1887 - ஜப்பானின் ஹமமாட்ஸூ எனும் ஒரு சிறிய நகரம். அங்கு டோராகொசு யமஹா (Torakusu Yamaha) என்பவர், உள்ளூர் பள்ளி ஒன்றில் பழுதான ஒரு இசைக்கருவியை சரி செய்து கொண்டிருந்தார். அந்த காலகட்ட ஜப்பானில் அந்த மாதிரியான இசைக்கருவிகளை சரி செய்வதற்கென பிரத்யேகமாக யாருமே இல்லாத சூழல். ஆனால், அந்த இசைக்கருவியை சரி செய்துகொண்டிருந்த யமஹா, ஒரு மெக்கானிக்கோ அல்லது இசைக் கலைஞரோ கிடையாது. மாறாக அவர் ஒரு மருத்துவ உபகரண தயாரிப்பாளர். அந்த இசைக்கருவி எப்படி இயங்குகிறது, அதை நாம் ஏன் சரி செய்யக் கூடாது என்கிற தன்முனைப்பில் அந்த வேலையில் இறங்குகிறார்.
அந்த இசைக்கருவி இயங்கும் முறையைக் கண்டறிந்ததோடு, அந்த பிரச்சனையையும் சரி செய்கிறார் யமஹா. அந்தப் புள்ளியில் வேறொரு சிந்தனை அவருக்கு உதிக்கிறது. நாம் ஏன் இதேபோன்ற இசைக் கருவிகளை உருவாக்கக் கூடாது என்கிற கேள்வி எழுகிறது. அப்படி புதிய பியானோ கருவிகளை உருவாக்கத் தொடங்க, அந்தக் கருவிகள் அவர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக வரவே, ஒரு கட்டத்தில் ஜப்பான் அரசின் கவனத்தையும் ஈர்க்கிறார். அந்தப் புள்ளி தான் யமஹாவின் தாய் நிறுவனமான நிப்பான் காக்கி கம்பெனி உதயமான தருணம். யமஹாவின் முதல் வணிகள் என்பது இசைக் கருவிகள் தயாரித்து விற்பது தான். கிட்டத்தட்ட 1950-கள் வரைக்கும் இது மட்டும் தான் யமஹாவின் வணிகமாக இருந்தது.
ஆனால், உலகப் போரின் முடிவில் ஜப்பான் ஒரு முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டது. ஜப்பானின் தொழில் மூலப் பொருட்களுக்கான பற்றாக்குறை. கிட்டத்தட்ட எல்லாத் துறைகளுமே இந்த சிக்கலை எதிர்கொண்டன.
நாட்டையே மொத்தமாக சீரமைத்துப் புதிதாக கட்டியெழுப்ப வேண்டிய நிலை. யமஹாவின் பியானோ தொழிற்சாலைகள் முடங்கியதோடு, தொழிலாளர்களுக்கும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டது.
அப்படியான சூழலில் என்ன செய்வது என விழி பிதுங்கிக் கொண்டிருந்த நிலையில், நிறுவனத்தின் தலைவர் கெனிச்சி கவாகாமி (Genichi Kawakami), தொழிற்சாலையில் இருக்கும் திறமையான தொழிலாளர்களையும், எந்திரங்களையும் பார்த்தபோது, அவருக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. அன்றைய காலகட்டத்தில் ஜப்பானின் மிகப்பெரிய தேவையாய் இருந்த மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கலாமே என்கிற யோசனையை முன்வைத்தார். ஆனால், அந்த யோசனையைக் கேட்ட நிர்வாகக் குழுவினர் அதற்கு கடுமையான எதிர்வினையாற்றுகின்றனர். பியானோ தயாரிப்பில் இருக்கும் ஒரு நிறுவனத்தால், எப்படி எந்தவிதத் தொடர்பும் முன் அனுபவமும் இல்லாத மோட்டார் சைக்கிள் துறையில் சாதிக்க முடியும் என்பதே அங்கிருந்த பெரும்பாலானவர்களின் கேள்வியாக இருந்தது. ஆனால், கெனிச்சி கவாகாமி தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருந்தார்.
இதற்கு முன் பியானோவை உற்பத்தி செய்தோம்; இப்போது மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யப் போகிறோம். அதே குழுவை வைத்துக் கொண்டு நம்மால் நிச்சயம் தரமான மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்ய முடியும்கெனிச்சி கவாகாமியின் நம்பிக்கை
இதன் விளைவாக 1955-ம் ஆண்டு யமஹா தனது முதல் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. YA1 எனும் அந்த முதல் மோட்டார் சைக்கிளைப் பார்த்து ஜப்பான் ஆட்டோமொபைல் சந்தையில் இருந்த பலரும் நகைக்கவே செய்தார்கள். ஒரு பியானோ நிறுவனம் தயாரித்த மோட்டார் சைக்கிள் என்ற பதமே யமஹாவை சீண்டியது. அந்த காலகட்டத்திலேயே 20 வருடங்களாக சந்தையில் ஹோண்டா நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஆக்கிரமித்திருந்தது. அனைத்து துறைகளிலும் பிரமாண்டமான அந்த நிறுவனத்தின் முன், யமஹாவால் ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்கிற எள்ளலும் எழுகிறது.
ஆனாலும், யமஹா மோட்டார் சைக்கிள் சந்தையில் தாக்குப்பிடிக்கிறது. முதல் ஆண்டில் மொத்தம் 125 மோட்டார் சைக்கிள்களை யமஹா விற்பனை செய்தது. இன்னொரு புறம் யமஹாவின் பொறியாளர்கள் கடுமையான சிக்கலை எதிர்கொள்கிறார்கள்; டிசைனர் குழு தடுமாறுகிறது. இதையெல்லாம் கவனித்த நிர்வாகக் குழு, பதற்றமடைகிறது. நாம் உடனே மோட்டர் சைக்கிள் உற்பத்தியை நிறுத்திவிட்டு பியானோ தயாரிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தலாம் என்கிறார்கள்.
இந்த விவாதங்களை எல்லாம் கண்டுகொள்ளாத கெனிச்சி. நம்மால் ஜப்பானிலேயே ஆகச்சிறந்த பியானோவை உருவாக்க முடியும் என்றால், அதே தரத்துடன் மோட்டார் சைக்கிள்களையும் உருவாக்க முடியும் என்று நம்பினார். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் யமஹா பற்றிய பேச்சு அடிமட்டத்தில் இருக்கும் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களிடம் மெல்ல தொடங்குகிறது. யமஹாவின் மோட்டார் சைக்கிள்களில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறது என்ற பேச்சு மக்களிடையே பரவத் தொடங்குகிறது.
அந்த சூழலில் தான் 1957 மவுண்ட் அசாமா ரேஸ் நடக்கிறது. ஜப்பானில் தேசிய அளவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் ரேஸ் அது. அந்த ரேஸில் ஜப்பானின் மொத்த மக்கள் முன்னிலையில், ஹோண்டாவை முந்தி பந்தயம் அடித்தது யமஹா. அந்த வெற்றி யமஹாவின் சரித்திரத்தை திருத்தி எழுதத் தொடங்கியது. நாடு முழுவதுமிருந்து விற்பனைப் பிரதிநிதிகளிடமிருந்து ஆர்டர்கள் குவியத் தொடங்குகின்றன. 1960-களில் யமஹா மோட்டார்ஸ் தனி ஒரு நிறுவனமானது.
அதற்கடுத்ததாக, கெனிச்சி கடலைப் பார்க்கிறார், உடனே அவுட் போர்ட் மோட்டார்ஸ், போட்ஸ் அண்ட் ஸ்னோமொபீல்ஸ்னு அடுத்தடுத்து உருவாக்குறாங்க. 1968-ல் உலகின் முதல் Stand up watercraft ஆன Wave runner-ஐ யமஹா உருவாக்கியது. இதே நேரத்தில் யமஹாவின் ஆடியோ டிவிஷனும் மிகப்பெரிய வளர்ச்சி அடைகிறது. பியானோவில் இருந்து படிப்படியாக வளர்ந்து மிக்ஸிங் கன்சோல்ஸ், ஆம்ப்ளிஃபையர்ஸ்னு யமஹா மிரட்டுறாங்க. இசைத் துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது யமஹா.
எந்தவொரு இசை நிகழ்ச்சிகள் என்றாலும், அங்கு யமஹாவின் தயாரிப்புகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. எல்லா ஸ்டூடியாக்களிலும் யமஹா கால்பதிக்கிறது. கிட்டத்தட்ட 1990களில் யமஹா எட்டு தனித்தனி துறைகளில் கால் பதித்திருந்தது. 2000 காலகட்டத்தில் ஃபார்முலா 1- மோட்டோ ஜிபி கார் பந்தய கார்கள் யமஹாவின் லோகோவைத் தாங்கி சீறிப்பாயத் தொடங்கின.
இன்றைய சூழலில் யமஹா மோட்டார்ஸையும் யமஹா கார்ப்பரேஷனையும் ஒன்றாக சேர்த்தால் அதன் மொத்த சந்தை மூலதல மதிப்பு கிட்டத்த 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறார்கள். இதை இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றினால் தோராயமாக 1.44 லட்சம் கோடி ரூபாய் ஆகும். யமஹா தான் தொழில்முறை ஒலிக்கோர்ப்புத் துறையில் முதலிடம், பியானோ உற்பத்தியில் முதலிடம்.
இதற்கெல்லாம் அடிப்படை ஒரு மருத்துவத் துறை உபகரண உற்பத்தியாளர் ஒரு இசைக்கருவியை சரி செய்த அந்தத் தருணம் தான். அங்கு தொடங்கிய யமஹாவின் பயணம் இன்று பல்வேறு துறைகளிலும் கிளைகள் பரப்பி பரந்து, விரிந்து நிற்கிறது.