புதுடெல்லி
இந்தியாவில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 31.57 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.
இந்திய ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர்கள் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவில், 31.57 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதே காலகட்டத்தில், உள்ளூரில் 4.39 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்டு உள்ளன. கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த விற்பனை எண்ணிக்கை 3.21 லட்சம் வாகனங்கள் என்ற அளவில் இருந்தது.
இதனால், கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் 36.5 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்து உள்ளது. இதேபோன்று, ஆகஸ்டில் 20.34 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்கப்பட்டு உள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
நடப்பு ஆகஸ்டில், பயணிகள் வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என ஒட்டு மொத்தத்தில் 31 லட்சத்து 57 ஆயிரத்து 822 வாகனங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இதேபோன்று, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த காலகட்டத்தில் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 22.8 சதவீதமும், இரு சக்கர வாகனங்கள் விற்பனை 10.5 சதவீதமும் அதிகரித்து உள்ளன.