வணிகம்

நகர்ப்புற மக்களின் பொருளாதார நிலை மோசம்; ரிசர்வ் வங்கி ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் நகர்ப்புற மக்களின் பொருளாதார நிலை கடந்த ஓராண்டில் மோசமடைந்துள்ளதாக 54.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கி நடத்திய நுகர்வோர் நம்பிக்கை ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

19 நகரங்களில் ஆய்வு

இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், ‘நகர்ப்புற நுகர்வோர் நம்பிக்கை ஆய்வு’ நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 19 முக்கிய நகரங்களைச் சேர்ந்த 6,054 பேரிடம் கடந்த மாதம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது.இந்த ஆய்வில், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாக 54.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 50.5 சதவீதமாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 40.9 சதவீதமாகவும் இருந்தது.அதேநேரத்தில், பொருளாதார நிலை மேம்பட்டுள்ளதாக 25.3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 27.1 சதவீதமாக இருந்தது.

பொருளாதார எதிர்பார்ப்பு குறைந்தது

மக்களின் தற்போதைய பொருளாதார உணர்வை அளவிடும் குறியீடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 88.3 புள்ளிகளாக இருந்த இந்தக் குறியீடு, கடந்த மாதம் 87.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.மேலும், அடுத்த ஓராண்டில் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என்று 38.3 சதவீதம் பேர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, எதிர்கால பொருளாதார எதிர்பார்ப்பைக் குறிக்கும் குறியீடு 115.3 புள்ளிகளில் இருந்து 113.5 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.

ஆடம்பரச் செலவுகள் குறைப்பு

உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு காரணமாக, அவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கான செலவினங்களை நகர்ப்புற மக்கள் குறைத்துக் கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவை தொடர்ந்து மக்களின் முக்கியக் கவலைகளாக இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT