சென்னை,
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது போர் உச்சத்தில் இருக்கும் சூழலிலும் தங்கம் விலை கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது.
கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின்னர் தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வருகிறது. தினமும் புதிய உச்சம் என்ற போக்கில் இருந்த தங்கம், இப்போது தின மும் சரிவு என்ற பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளது.
அந்த வரிசையில் நேற்றும் தங்கம் விலை சரிந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 570-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட் சத்து 16 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்து இருந்தது. மீண்டும் பிற்பகலில் கூடுதலாக கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.670-ம், சவரனுக்கு ரூ.5,360-ம் அதிரடியாக சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியை பொறுத்தவரையில் நேற்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்க போவதில்லை என்று அறிவித்திருப்பதுதான் தங்கம் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது. முதலீட்டாளர்கள் வட்டி தராத தங்கத்தின் மீது முதலீடு செய்வதை தவிர்த்து, லாபம் தரக்கூடிய அமெரிக்க அரசு பத்திரங்கள், டாலர் மீது கவனம் செலுத்துவார்கள். இதனால் தங்கத்தின் தேவை குறைந்து விலை சரிகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வும் மறைமுகமாக தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தை குறைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் விலை குறையுமா? அல்லது பழையபடி மீண்டும் ஏற்றம் காணுமா? என்பது இனி வரும் நாட்களில் அமெரிக்க பொருளாதார தரவுகளே நிர்ணயம் செய்யும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கடந்த 9 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.40-ம், கிலோவுக்கு ரூ.40 ஆயிரமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
20.03.2026 ஒரு சவரன் ரூ. 1,11,600 (இன்று)
19.03.2026 ஒரு சவரன் ரூ. 1,11,200 (நேற்று)
18.03.2026 ஒரு சவரன் ரூ. 1,16,560
17.03.2026 ஒரு சவரன் ரூ. 1,17,200
16.03.2026 ஒரு சவரன் ரூ. 1,17,680
15.03.2026 ஒரு சவரன் ரூ. 1,18,080