ஜியோ பிளாட்பார்ம்ஸ் 
வணிகம்

ஜியோ பிளாட்பார்ம்ஸ் பங்குகள் எப்படி ஒதுக்கப்படும்?

ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளதால், விண்ணப்பித்த அனைவருக்கும் பங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் ரூ.30,213 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக வெளியிடப்பட்ட 27 கோடி பங்குகளை வாங்க, சுமார் ரூ.7.5 லட்சம் கோடி மதிப்பிலான விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த 21-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடைந்த இந்தப் பங்கு வெளியீட்டில், ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட 22.19 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 70.55 மடங்கும், பெரிய முதலீட்டாளர்கள் பிரிவில் 14 மடங்கும், சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 2.72 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இந்தப் பங்கு வெளியீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு நாளை (அக்டோபர் 26) பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளதால், விண்ணப்பித்த அனைவருக்கும் பங்குகள் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். சிறு முதலீட்டாளர்களுக்கு முடிந்தவரை குறைந்தபட்சம் ஒரு தொகுதி பங்குகள் கிடைக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

குலுக்கல் முறை

அதாவது, ஜியோ பங்கு வெளியீட்டில் குறைந்தபட்சம் 12 பங்குகள் கொண்டது ஒரு லாட் (தொகுப்பு) ஆகும். ஒரு பங்கின் அதிகபட்ச விலை ரூ.1,119 என்பதால், 12 பங்குகளின் மதிப்பு ரூ.13,428 ஆகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச லாட் பங்குகளை வழங்க போதுமான பங்குகள் இல்லாதபோது, யாருக்குப் பங்குகள் கிடைக்கும் என்பது குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படும். அதிக எண்ணிக்கையிலான பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தாலும் பங்குகள் கிடைப்பது உறுதியல்ல.

பங்குச்சந்தையில்...

ஒருவர் ஒரு லாட்டுக்கு (12 பங்குகளுக்கு) விண்ணப்பித்துப் பங்குகள் ஒதுக்கப்பட்டால், அந்தப் பங்குகளுக்கான தொகை பயன்படுத்தப்படும். பங்குகள் ஒதுக்கப்படாவிட்டால், முழுத் தொகையும் விடுவிக்கப்படும். அதிக எண்ணிக்கையிலான பங்குகளுக்கு விண்ணப்பித்து. ஒரு பகுதி பங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டால், ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கான தொகை மட்டும் பயன்படுத்தப்படும்; மீதித் தொகை விடுவிக்கப்படும்.

பங்குகள் ஒதுக்கப்படாதவர்களின் வங்கிக் கணக்கில் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டிருந்த பணம் 27-ந்தேதி விடுவிக்கப்படும். ஒதுக்கப்பட்ட பங்குகள் அதே நாளில் முதலீட்டாளர்களின் மின்னணு பங்குக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஜியோ பிளாட்பார்ம்ஸ் பங்குகள் 28-ந்தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.

SCROLL FOR NEXT