மும்பை
இந்திய பங்கு சந்தைகள் இன்று ஏற்றம் கண்டதுடன் ரூபாயின் மதிப்பும் உயர்வடைந்து உள்ளது.
இந்திய பங்கு சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சரிவுடன் காணப்பட்டன. தொடக்கத்தில் 30 புள்ளிகள் சரிவடைந்தபோதும், பின்னர் சமநிலைக்கு வந்து, ஏற்றம் கண்டன.
இதில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 648.52 புள்ளிகள் (0.90 சதவீதம்) உயர்ந்து 72,573.20 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 200.55 புள்ளிகள் (0.90 சதவீதம்) உயர்ந்து 22,563.90 புள்ளிகளாக நிலை கொண்டது.
இதனால், இந்திய பங்கு சந்தைகள் லாப நோக்குடன் காணப்பட்டன. இவற்றில் 1,630 பங்குகள் லாபத்துடன் இருந்தன.
எனினும், 1,731 பங்குகள் நஷ்டத்துடன் காணப்பட்டன. 176 பங்குகள் மாற்றமின்றி இருந்தன. துறை ரீதியாக பார்க்கும்போது, தகவல் தொழில் நுட்ப துறை அதிக அளவாக 3.5 சதவீதம் அளவுக்கு லாப நோக்கத்துடன் காணப்பட்டது.
இதனை தொடர்ந்து, தானியங்கி, ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவை 0.5 முதல் 0.9 சதவீதம் அளவுக்கு லாபத்துடன் காணப்பட்டன. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 62 பைசாக்கள் உயர்ந்து ரூ.95.16 என்ற அளவில் இருந்தது.