புதுடெல்லி,
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு இன்று தொடங்கியது. 100 நிமிடங்களில் முழுமையான முன்பதிவை எட்டியது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகள் பிரிவான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் நிறுவனம் (Jio Platforms Ltd) பங்குச் சந்தை மூலம் சுமார் 30,213 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியது. ஆரம்பநிலை பொது பங்கு வெளியீடு இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்தது. ஒரு பங்கின் விலை 1,065 ரூபாயிலிருந்து 1,119 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பொது பங்குகளுக்கான முன்பதிவு இன்று காலையில் தொடங்கியது. தனிநபர்கள் குறைந்தபட்சம் ஒரு லாட்டாகவும், அதிகபட்சமாக 14 லாட்டாகவும் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு லாட் என்பது 12 பங்குகள் ஆகும்.
பங்கு வெளியீட்டிற்கான முன்பதிவு தொடங்கிய 100 நிமிடங்களிலேயயே மிக விரைவாக முழுமையாக சந்தாதாரர்களைப் பெற்று சாதனை படைத்தது. காலை 10:36 மணி நிலவரப்படி, இந்த வெளியீட்டிற்கு 1.03 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன; அதாவது, 19.75 கோடி பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், முதலீட்டாளர்கள் சுமார் 20.25 கோடி பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு யார் யாருக்கு எவ்வளவு பங்குகள் என்று முடிவு செய்யப்பட்டு, அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் பங்குகள் 28-ஆம் தேதி மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகிய இரண்டிலும் பட்டியலிடப்பட உள்ளன.