வணிகம்

டார்க் வெப்பில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்த விவகாரம்: எஸ்.பி.ஐ விளக்கம்

சைபர் தாக்குதலால், வங்கியின் முக்கிய வணிகச் செயல்பாடுகள், நிதி செயல்திறன் அல்லது வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றில் எந்தவொரு குறிப்பிடத்தக்க பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணையதளம் மீது சைபர் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு, 3.75 லட்சம் தரவுகளை திருடப்பட்டு ’டார்க் வெப்’பில் வெளியிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கியுள்ளது. லட்சக்கணக்கானவர்கள் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர் இந்தியா மட்டும் மின்றி வெளிநாடுகளிலும் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கி மிகவும் பாதுகாப்பானது என வாடிக்கையாளர்களால் நம்பப்படும் நிலையில், அதன் மீது ஹேக்கர்கள் சைபர் அட்டாக் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள எஸ்பிஐ கூறியிருப்பதாவது;

தனிப்பட்ட அடையாளங்கள்

கடந்த 16 ஆம் தேதி வங்கியின் வாடிக்கையாளர் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்திருக்கலாம் என பாதுகாப்பு சைபர் ஏஜென்சி மற்றும் இந்திய கணினி அவசரகால கட்டுப்பாட்டுக் குழு ஆகியவற்றிடமிருந்து தகவல் கிடைத்தது டார்க் வெப்பில் கிடைக்கக்கூடிய எஸ்பிஐ தொடர்பான சுமார் 3,75,000 தரவுகளை முதல்கட்டமாக ஆய்வு செய்ததில், 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டன. கசிந்த தகவல்களில் வாடிக்கையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண்கள், பிறந்த தேதிகள், பெயர்கள், பாலினம், மின்னஞ்சல் முகவரிகள், வசிப்பிட முகவரிகள், கிளை, கடன் விண்ணப்பங்கள் உள்ளிட்டவை இருக்கின்றது.

விரிவான மதிப்பீடு

கசிந்த தரவுகளின் நம்பகத்தன்மை மற்றும் முழுமையை உறுதிப்படுத்தவும், கசிவின் அளவைத் தீர்மானிக்கவும், வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் ஏற்படக்கூடிய தொடர்புடைய அபாயங்களை மதிப்பிடவும் ஒரு விரிவான விசாரணை தேவைப்படுகிறது. இந்த சைபர் தாக்குதலால், வங்கியின் முக்கிய வணிகச் செயல்பாடுகள், நிதி செயல்திறன் அல்லது வணிகத் தொடர்ச்சி ஆகியவற்றில் எந்தவொரு குறிப்பிடத்தக்க பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வங்கியின் முக்கிய வணிகச் செயல்பாடுகள் எந்தவித இடையூறும் இன்றி இயல்பாகத் தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஒரு விரிவான மதிப்பீடு தற்போது நடைபெற்று வருகிறது, மேலும் தேவைக்கேற்ப உரிய தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT