வணிகம்

இந்தியாவின் விதிகளையும் கொள்கைகளையும் பின்பற்ற வேண்டும்: எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி

கடந்த 2016-ம் ஆண்டு தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்த ஜியோ நிறுவனம், தற்போது 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது

மும்பை,

ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டி வருகிறது.இந்திய தொழிலதிபர்கள் தங்கள் சுயநலனுக்காக முட்டுக்கட்டை போடுவதாக விமர்சித்த எலான் மஸ்க், ரிலையன்ஸ் குழும த்லைவர் முகேஷ் அம்பானியை நேரடியாக விமர்சித்து இருந்தார். மேலும், இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையில் போட்டியைத் தடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

போட்டியை கண்டு அஞ்சியது இல்லை

இந்த நிலையில், எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் வரவேற்கும் சூழல் நிலவுகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் பொருந்தும் போட்டியைக் கண்டு ஒருபோதும் ரிலையன்ஸ் அஞ்சியதில்லை. வாடிக்கையாளர்களுக்கு யார் சிறந்த சேவையை வழங்குகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கான உண்மையான அளவுகோலாகவே போட்டியைப் பார்க்கிறோம்.

சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்

கடந்த 2016-ம் ஆண்டு தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்த ஜியோ நிறுவனம், தற்போது 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் துறையில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் போட்டியை வரவேற்கிறோம். ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இந்திய மக்களுக்கு சேவை செய்வதுடன், நாட்டின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்:” என்று தெரிவித்துள்ளது..

3 நிறுவனங்கள் போட்டி

இந்தியாவில் ஸ்டார்லிங்க், ஜியோ மற்றும் பார்தி குழுமத்தின் ஆதரவு பெற்ற ஒன்வெப் ஆகிய நிறுவனங்கள் சேட்டிலைட் இணைய சேவையைத் தொடங்குவதற்கான அனுமதி நடைமுறைகளை பெறும் முயற்சிகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT