வணிகம்

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று முன் தினம் பெட்ரோல் லிட்டருக்கு 2.46 ரூபாயும் , டீசல் லிட்டருக்கு 2.57 ரூபாயும் உயர்த்தப்பட்டது. அதேபோல், நேற்றும் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

தொடர்ந்து 3வது நாள்

அதன்படி, நாடு முழுவதும் தொடர்ந்து 3வது நாளாக இன்று பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகளும், டீசல் லிட்டருக்கு 32 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 12 நாட்களில் 6வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 108.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் லிட்டருக்கு 32 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 99.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தால் ஹர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர்களை கடந்து வர்த்தகமாகி வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.