இந்திய பங்குச்சந்தையில் இன்று கடும் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 25,350 புள்ளிகளுக்கு கீழே இறங்கியது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய பங்குசசந்தையில் கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 897 புள்ளிகளும், நிப்டி 286 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் முடிவடைந்தது.இந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின. ஆனால், சிறிது நேரத்திலேயே முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்கத் தொடங்கினர். இதனால் சந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,483.72 புள்ளிகள் சரிந்து 82,435.99 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது 1.77 சதவீத சரிவாகும்.இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 450.95 புள்ளிகள் சரிந்து 25,349.65 புள்ளிகளில் முடிவடைந்தது. இது 1.75 சதவீத சரிவாகும்.
கடந்த 4 வாரங்களாக பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டதால், முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று லாபத்தை உறுதி செய்யத் தொடங்கினர். இதுவே இன்றைய சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.மேலும், சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு குறித்த அச்சம், உலோகங்களின் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்தன.
தென் கொரியாவின் பங்குச்சந்தை குறியீடும் 3.31 சதவீதம் சரிந்தது. ஆசிய சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைய சரிவால் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.