மும்பை
ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் இந்திய பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை வாரத்தின் தொடக்க நாளான கடந்த திங்கட்கிழமை லாபத்துடன் நிறைவடைந்தது. தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக ஏற்றம் கண்டது. கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், 2 நாட்களாக காணப்பட்ட ஏற்றம் முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிறுவனங்களும் லாபம் அடைந்திருந்தன.
இதில், டிரென்ட், கோடக் மகிந்திரா வங்கி, எச்.யு.எல்., எச்.டி.எப்.சி. லைப், ஜியோ பைனான்சியல் ஆகிய நிறுவனங்கள் நிப்டி குறியீட்டில் லாபம் ஈட்டி இருந்தன. எனினும் கோல் இந்தியா, டெக் மகிந்திரா, மேக்ஸ் ஹெல்த்கேர், ஐ.டி.சி. மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தன.
இதற்கு கச்சா எண்ணெய் விலை குறைவு முக்கிய காரணியாக கூறப்பட்டது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை இன்று வர்த்தக நிறைவில் சரிவை சந்தித்துள்ளது. இதன்படி, சென்செக்ஸ் குறியீடு 429.11 புள்ளிகள் குறைந்து 72,638.70 புள்ளிகளாக இருந்தது. இது 0.59 சதவீதம் சரிவு ஆகும். நிப்டி குறியீடு 173.05 புள்ளிகள் சரிந்து 22,603.05 புள்ளிகளாக இருந்தது. இது 0.76 சதவீதம் சரிவு ஆகும். 2 நாள் உயர்வை கண்டிருந்த மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் இன்று வர்த்தக நிறைவில் சரிவை சந்தித்துள்ளன.
இதில் நிப்டி குறியீட்டில், டைட்டன் நிறுவனம், அதானி என்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ என்டர்பிரைசஸ், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. எனினும், கோடக் மகிந்திரா வங்கி, பி.எஸ்.இ. நிறுவனம், பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் கோல் இண்டியா உள்ளிட்ட நிறுவனங்கள் லாபம் கண்டுள்ளன.