தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் கீர்த்தி ஷெட்டி, கார்த்தியுடன் நடித்த வா வாத்தியார் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். மேலும் பிரதீப் ரங்கநாதனுடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரவிமோகனுடன் நடித்துள்ள ஜீனி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி ஷெட்டியிடம் நடிகைகளுக்கான 8 மணி நேர பணி குறித்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கீர்த்தி ஷெட்டி, “நடிகைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான விருப்பங்களும் கருத்துகளும் இருக்கும். அவர்களின் உடல்நிலை மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளும் மாறுபடும். எனவே மற்றவர்களின் கருத்துகள் குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை 8 மணி நேரத்தைத் தாண்டியும் பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். இளமையும் உற்சாகமும் இருக்கும் காலத்தில் கூடுதல் நேரம் உழைப்பதில் தவறு இல்லை. அதே சமயம் நடிகைகளின் உடல்நலத்தையும் தனிப்பட்ட தேவைகளையும் படக்குழுவினர் கருத்தில் கொள்வது அவசியம்” என்று தெரிவித்தார்.
கீர்த்தி ஷெட்டியின் இந்த கருத்து திரையுலகில் நடிகைகளின் பணி நேரம் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில் கவனம் பெற்று வருகிறது.