சினிமா செய்திகள்

செல்வாக்கு மிக்க 100 இந்தியர்கள்: டைம் பட்டியலில் பா. ரஞ்சித், அனிருத், நயன்தாரா தேர்வு

டைம்100 நெக்ஸ்ட் இந்தியா 2026 பட்டியலில், சினிமா, விளையாட்டு, இசை, தொழில்நுட்பம், அறிவியல், தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் பா. ரஞ்சித், அனிருத், நயன்தாரா, சமந்தா, சாய் பல்லவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்க நிறுவனமனான டைம் இதழ் வெளியிட்டுள்ளது. டைம்100 நெக்ஸ்ட் இந்தியா 2026 என்ற பெயரில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், சினிமா, விளையாட்டு, இசை, தொழில்நுட்பம், அறிவியல், தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

திரைத்துறை

நடிகை நயன்தாரா, சமந்தா, சாய் பல்லவி, பார்வதி திருவோத்து, இசையமைப்பாளர் அனிருத், ராப் பாடகர் அறிவு, இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். நடிகை ஆலியா பட் புகைப்படம் இந்த இதழுக்கான முகப்பு படமாக வைக்கப்பட்டுள்ளது. ஷாருக்கானின் மகனான ஆர்யன்கான் ஆர்யன் கான், இயக்குநர் பாயல் கபாடியா, பாடகர் தில்ஜித் தோசாஞ் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

விளையாட்டுத் துறையில் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, குகேஷ் உள்ளிட்டோருக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதேசமயம், இந்தப் பட்டியல் தரவரிசைப் பட்டியல் அல்ல. பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க 100 இந்தியர்களை அடையாளம் காணும் முயற்சியாகும். வரும் டிசம்பர் 12ஆம் தேதி மும்பையில் டைம்100 நெக்ஸ்ட் இந்தியா விருது விழாவும் நடைபெறவுள்ளது. ரிலையன்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து டைம் நிறுவனம் விருது விழாவை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT