சினிமா செய்திகள்

“கோ” படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு.. கே.வி. ஆனந்த் குறித்து ஜீவா உருக்கம்

கடந்த 2011ம் ஆண்டில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னனி டைரகடர்களின் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி.ஆனந்த், கடந்த 1995 ஆம் ஆண்டு, தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். இவரது இயக்கத்தில் வெளியான அயன், கோ, அனேகன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழ் திரைப்படத் துறையில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் ஜீவா. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அவர்களின் மகனாக சினிமா உலகில் அறிமுகமானாலும் தனது சொந்த முயற்சியால் நடிகராக தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

ஜீவா 2003ம் ஆண்டு ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து ராம் ,ஈ, கற்றது தமிழ் போன்ற படங்களில் அவரது வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் அவரை திறமையான நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க உதவியது. ஜீவா - ராஜேஷ் கூட்டணியில் கடந்த 2009-ல் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. ஷங்கர் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்திலும் அசத்தினார். பிளாக் திரைப்படம் ஜீவாவுக்கு மீண்டும் ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது. சமீபத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘கோ’. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. படம் ரிலீஸாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

இந்நிலையில் ‘கோ’பட போஸ்டரை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து ஜீவா பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த நாளில், எனக்கு மிகவும் பிடித்த கே.வி. ஆனந்த் சாரை நினைவு கூர்கிறேன். உங்களிடமிருந்து வந்த அந்த முதல் தொலைபேசி அழைப்பும், கடைசி குறுஞ்செய்தியும் இன்றும் என் நினைவில் இருக்கிறது. நீங்கள் என்றும் நீங்காப் புகழுடன் வாழும் ஒரு மேதை. நன்றி சார். அஸ்வின்(கோ படத்தில் ஜீவா கதாபாத்திரத்தின் பெயர்) மற்றும் மற்றவர்கள் மீது நீங்கள் பொழிந்த அன்பிற்கு நன்றி சார்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.