சென்னை,
சர்கார் படம் வெளியாகும் முன்பே கதை திருட்டு, அரசியல் படம் என ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. இதனாலேயே இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் தீபாவளியன்று வெளியாகும் சர்கார் படத்தை எச்.டி. பிரிண்டில் அன்றைய தினமே வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவு கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெளிப்படையான சவால் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது.
சவால் விட்டிருந்தபடி சர்கார் திரைப்படம் நேற்றுமுன்தினம் மாலை இணையதளத்தில் வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளத்தில் வேகவேகமாக பகிரப்பட்டது. இதனால் ஏராளமானோர் சர்கார் திரைப்படத்தை திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட மேலும் டுவிட்டர் பதிவில் சர்கார் படத்தை வெளியிட்டது போல் ரஜினிகாந்தின் 2.0 படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் விடுத்து உள்ளனர்.
சர்கார் படம் வெளியான அன்றே இணையதளத்தில் பதிவேற்றியது போல் ரஜினியின் 2.0 படமும் வெளியீடு என தமிழ் ராக்கர்ஸ் டுவிட் செய்து உள்ளனர்.