வியட்நாம்,
வியட்நாமில் நடைபெற்ற உலகளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் எபனேசர் தேவராஜ் பங்கேற்றார். இதில் சிறப்பாகச் செயல்பட்ட அவர், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிப்புடன் உடற்கட்டையும் கட்டுக்கோப்பாகப் பராமரிக்கும் நடிகர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில், 72 வயதிலும் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர் சரத்குமார் பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். அவரைப் போலவே சூர்யா, அருண் விஜய், சூரி, துருவ் விக்ரம் உள்ளிட்ட நடிகர்களும் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த வரிசையில், தமிழ் நடிகர் ஒருவர் சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'கருப்பங்காட்டு வலசு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் எபனேசர் தேவராஜ். இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், நடிப்புக்கு இணையாக உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டைப் பராமரிப்பதிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். தனது கடினமான பயிற்சியின் மூலம் கட்டுக்கோப்பான உடற்கட்டைப் பெற்றுள்ள எபனேசர் தேவராஜ், தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு ஆணழகன் போட்டிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது வியட்நாமில் நடைபெற்ற உலகளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் எபனேசர் தேவராஜ் பங்கேற்றார். இதில் சிறப்பாகச் செயல்பட்ட அவர், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். 37 வயதாகும் எபனேசர் தேவராஜின் இந்த சர்வதேச சாதனைக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நடிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடர்ந்து வரும் அவர், உடற்கட்டுப் போட்டியிலும் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.